Published : 21 Sep 2024 01:49 PM
Last Updated : 21 Sep 2024 01:49 PM

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு சாத்தியமற்றது: வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி

மதுரை விமான நிலையத்தில்  ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ் கனி செய்தியாளர்களை சந்தித்தார்.

மதுரை: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி எம்.பி. கூறியுள்ளார்.

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த நவாஸ் கனி எம்பி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஒரே, நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், நிச்சயமாக அதற்கு சாத்தியம் இல்லை. ஐந்து மாநிலத்துக்குகூட ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாத நிலையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நடைமுறைக்கு சாத்தியமே இல்லை.

பாஜக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம் மீனவர்களை, கைது செய்வது அதிகமாகிவிட்டது. முன்பெல்லாம் கைது செய்தால் மீனவர்களை விடுவித்து படகுகளையும் கொடுத்து விடுவார்கள். ஆனால் தற்போது, மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளை பறிமுதல் செய்து ஏலம் விடுகின்றனர். கடந்த காலங்களில் மீனவர்களுக்கு சிறை தண்டனை கிடையாது. தற்போது இலங்கை நீதிமன்றத்தில் சிறை தண்டனை, அபராதம் விதிக்கின்றனர். இதனை மத்திய அரசு கண்டிக்கவில்லை.

பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் இலங்கை அரசை கண்டித்தால் நிச்சயம் மீனவர்கள் கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தடுக்கப்படும். இந்திய அரசு சொல்வதை கேட்கும் நிலையில் இலங்கை அரசு உள்ளது. ஆனால், இந்திய அரசு இலங்கையை வலியுறுத்துவதில்லை.

விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எங்களது மகளிர் அமைப்புகளை அனுப்புமாறு கேட்டிருந்தனர். தேசிய மகளிர் அணி தலைவி தலைமையில் கள்ளக்குறிச்சியில் நடைபெறும் மாநாட்டுக்கு அனுப்புவதாக கூறியுள்ளோம். மது ஒழிப்பு என்பது எங்களுடைய கொள்கையும் தான்.

உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். வக்பு நிலத்துக்கு தடையில்லா சான்று கொடுக்க முடியாது. வக்பு நிலமாக இல்லாதபோது எதற்காக அந்தச் சான்றை பெற வேண்டும். வக்பு சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்கள் பத்திரம் பதிவு செய்ய தமிழ்நாடு வக்பு வாரியம் அனுமதிக்காது. ஆக்கிரமிப்பிலுள்ள சொத்துக்களை மீட்கும் பணிகளில் தீவிரம் காட்டுவோம். வக்பு சொத்துக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து வளர்ச்சிக்காக பயன்படுத்துவோம். இதுவரை வக்பு சொத்தை விற்பதற்கு தடையில்லா சான்று வழங்கவில்லை, வழங்கவும் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x