Published : 21 Sep 2024 07:11 AM
Last Updated : 21 Sep 2024 07:11 AM

ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம் தமிழகத்தில் சாத்தியமா? - வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகளவில் தேவைப்படும்

கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் ஒரே நேரத்தில் சட்டப்பேரவை, மக்களவைக்கு பலமுறை தேர்தல் நடத்தப்பட்டுள்ள சூழலில், தற்போது ஒரே நாடு;ஒரே தேர்தல் திட்டம் அமலானால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகளவில் தேவைப்படும் என்று தமிழக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தும் வகையில், ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், இதற்கான மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முதல்வர்மு.க.ஸ்டாலின் இது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தமிழகத்தில் முந்தைய காலகட்டங்களில் பேரவைக்கும் மக்களவைக்கும் ஒரேநேரத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 1951-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை 5 தேர்தல்கள் தொடர்ச்சியாக ஒன்றாக நடத்தப்பட்டுள்ளன. 1977 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் வெவ்வேறு மாதங்களில் சட்டப்பேரவை, மக்களவைக்கு தேர்தல் நடைபெற்றது. அதன்பின் 1984, 89, 91, 96-ம் ஆண்டுகளில் இணைத்து நடத்தப்பட்டுள்ளன. 1998-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், மக்களவைக்கு 1998, 99, 2004, 2009, 2014, 2019 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் தேர்தல் நடந்துள்ளது. சட்டப்பேரவைக்கு 2001, 2006, 2011, 2016, 2021 என மாறுபட்ட ஆண்டுகளில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் சட்டப்பேரவை, மக்களவை தேர்தலுக்கான இடைவெளி என்பது 3 ஆண்டுகளாக உள்ளது. இதனால், ஒரேநாடு;ஒரே தேர்தல் முறை அமலுக்கு வரும்பட்சத்தில் அதில் அரசியல்ரீதியான சிக்கல்கள் ஏற்படும். பழைய வாக்குச்சீட்டு முறை தற்போது இல்லை. இதனால் தேர்தல் நடைமுறை, பணியாளர்கள், இயந்திரங்கள் தேவை இவற்றுக்கான சாத்தியங்களை கணக்கில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இதுகுறித்து தமிழக தேர்தல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் இல்லாமல் எந்த கருத்தும் கூற இயலாது. சாத்தியக் கூறுகள், செயல்படுத்தும் முறை குறித்து முழுவதும் ஆய்வு செய்ய வேண்டும். அனைத்துவித சாத்தியங்களும் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவாக இந்த தேர்தல் திட்டம் அமலுக்கு வந்தால், தமிழகத்திலும் செயல்பாட்டுக்கு வரும்.

அவ்வாறு அமல்படுத்தப்படும் நிலையில், மின்னணு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் இரண்டு மடங்காக தேவைப்படும். கடந்த மக்களவைத் தேர்தலில் 81,157 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 86,858 விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஒரே நாடு; ஒரே தேர்தல் முறை அமலானால் 5 லட்சத்துக்கும் அதிகமான இயந்திரங்கள் தேவைப்படும். அதேநேரம், ஒரே வாக்குச்சாவடியில் இரண்டு தேர்தலுக்கான இயந்திரங்களும் வைக்கப்படுவதால், வாக்குச்சாவடிகள், தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் அதே அளவில்தான் பயன்படுத்தப்படுவார்கள். அதில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x