Published : 21 Sep 2024 04:50 AM
Last Updated : 21 Sep 2024 04:50 AM
சென்னை: ‘தி இந்து’ நாளிதழின்146-வது நிறுவன தினத்தை முன்னிட்டு, ‘தி இந்து’குழுமம் மற்றும் தமிழக அரசின்சுகாதாரத்துறை சார்பில் சென்னையிலுள்ள நாளிதழ் விற்பனையாளர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு முழு உடல் பரிசோதனை முகாம் 5 அரசு மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசுபொது மருத்துவமனை, ஓமந்தூரார்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் மருத்துவ முகாம் நேற்று தொடங்கியது.
அரசு பன்னோக்கு உயர் சிறப்புமருத்துவமனையில் நடந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முழு உடல் பரிசோதனை முகாம் செய்து கொண்ட விற்பனையாளர்களுக்கு பரிசோதனை முடிவுகளை வழங்கினார். ‘தி இந்து’ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி எல்.வி.நவநீத், விற்பனை மற்றும் விநியோகப் பிரிவு துணைத் தலைவர் ஸ்ரீதர் அரனாலா, முதுநிலை பொதுமேலாளர் ரா.பாபு விஜய், மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ஆர்.மணி ஆகியோர் உடன் இருந்தனர்.
நிகழ்வில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: பிரம்மாண்டமான சேவை: இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று ‘தி இந்து’ நாளிதழ். ‘தி இந்து’ நாளிதழ் எந்தஅளவுக்கு செய்திகளை நடுநிலையோடு தந்து கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவார்கள். பத்திரிகை உலகில் ஒரு பிரம்மாண்டமான சேவையை ‘தி இந்து’நிர்வாகம் செய்து வருகிறது. அத்தகைய ‘தி இந்து’ நாளிதழுக்கு இன்று (நேற்று) 146-வது பிறந்த நாள் என்பது, நாம் எல்லோரும் மகிழ்ச்சி அடையக்கூடிய ஒன்று.
ஒரு தினசரி நாளிதழை 100 ஆண்டுகள் கடந்தும் நடத்துவது என்பது சாதாரணமானது அல்ல. இன்னும் சில ஆண்டுகளில் 150 ஆண்டை தொடவுள்ளது. ‘தி இந்து’ நாளிதழ் விற்பனைக்கும், பொதுமக்களுக்கு சென்றடைய காரணமாக இருக்கும் விநியோகம் மற்றும் விற்பனையாளர்களுக்கு முழு உடல் பரிசோதனையை ‘தி இந்து’ நாளிதழ் ஏற்பாடு செய்துள்ளது. இன்றைய சூழலில், அதுவும் கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் முழு உடல்பரிசோதனை என்பது அவசியமான ஒன்றாகும்.
அனைத்து நிலைகளிலும் பணியாற்றும் ஊழியர்களின் நோய் பாதிப்புகளைக் கண்டறிந்து, சிகிச்சைக்கு உதவும் வகையில் ‘தி இந்து’ நாளிதழ் நிர்வாகம் எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டத்தக்கது. தங்களுடைய நிர்வாகத்தில் பணியாற்றுபவர்களை ஊதியத்துக்காக மட்டும் என்று நிறுத்தி கொள்ளாமல், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினர் - ‘தி இந்து குடும்பத்தினர்’ என்ற வகையில் ‘தி இந்து’ நிர்வாகம் எடுத்திருக்கும் நல்ல முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT