Published : 20 Sep 2024 09:22 PM
Last Updated : 20 Sep 2024 09:22 PM
சென்னை: கிண்டி தேசிய பூங்கா எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நீர்நிலைகள் உள்ளதா என்பது குறித்து நீர்வள ஆதாரத்துறை அறிக்கை அளிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் விடப்படுவதால் ஏரி மாசுபடுவதாக நாளிதழில் வந்த செய்தி அடிப்படையில் வழக்காக எடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார். அதில், வேளச்சேரி ஏரியை ரூ.23.50 கோடியில் ஆழப்படுத்தி, கழிவுகளை அகற்றி சீரமைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, அமர்வின் உறுப்பினர்கள், வேளச்சேரி பகுதியில் பருவமழை காலங்களில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க, வேளச்சேரி ஏரியின் கீழ் மட்டத்தில் வரும் ஆதம்பாக்கம் ஏரி, மடிப்பாக்கம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி, கீழ்க்கட்டளை ஏரி, நாராயணபுரம் ஏரி ஆகியவற்றே தூர் வார வேண்டும். வேளச்சேரி ஏரியின் மேல் பகுதியான கிண்டி தேசிய பூங்கா பகுதியில் நீர்நிலைகள் உள்ளதா என அடையாளம் காண வேண்டும். அப்படி இருந்தால் அதை தூர் வாரி ஆழப்படுத்த வேண்டும். இது தொடர்பாக நீர்வளத்துறையும், வனத்துறையும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தவிட்டனர்.இந்நிலையில் இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் இன்று (செப்.20) விசாரணைக்கு வந்தது.
அப்போது, பசுமை தீர்ப்பாயம் கேட்ட அறிக்கை எங்கே? என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞரிடம் அமர்வின் உறுப்பினர்கள் கேட்டனர். வரும் செப்.23-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்வார் என தெரிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய நீர்நிலைகள் சில செங்கல்பட்டு அல்லது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரலாம். அதற்கு சென்னை ஆட்சியர் எப்படி அறிக்கை தாக்கல் செய்ய முடியும்? எனவே கிண்டி தேசிய பூங்காவில் நீர்நிலைகள் உள்ளதா? என ஆய்வு செய்து நீர்வளத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஏன் சென்னை மாநகராட்சி அதிகாரிகளை அழைக்கவில்லை. அடுத்த விசாரணையின்போது, சென்னை மாநகராட்சி தனி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்.23-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது, என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT