Published : 20 Sep 2024 09:16 PM
Last Updated : 20 Sep 2024 09:16 PM

கோவை மலைக் கிராமங்களில் சட்டவிரோத செம்மண் திருட்டு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: கோவை மாவட்ட மலைக்கிராமங்களில் சட்டவிரோதமாக செம்மண் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு உத்தரவிட நேரிடும், என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் தாலுகாவுக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளான மதுக்கரை, ஆலந்துரை, வெள்ளிமலை போன்ற கிராமங்களில் சட்ட விரோதமாக செம்மண் வெட்டி எடுக்கப்படுவதாக வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் வீடியோ ஆதாரங்களுடன் நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கெனவே முறையீடு செய்திருந்தார். அதன்படி நீதிபதிகள், இந்த கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இதே அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, கனிம வளத்துறை உதவி இயக்குனர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.அதையடுத்து நீதிபதிகள், கனிமவளத்துறை உதவி இயக்குனர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், செம்மண்ணை சட்டவிரோதமாக வெட்டி எடுத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருப்பது வெறும் கண்துடைப்பு, என அதிருப்தி தெரிவித்தனர்.

வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்துள்ள வீடியோவில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பெருமளவில் செம்மண் எடுக்கப்பட்டு இருப்பது நிரூபணமாகியுள்ளது. இதை அனுமதித்தால் மேற்கு தொடர்ச்சி மலையே காணாமல் போய்விடும் என்றும் நிலச்சரிவு அபாயம் ஏற்படும். செம்மண் எடுக்கப்படுவதால் உருவாகும் குழிகளில் யானைகள் போன்ற விலங்குகள் விழும் அபாயம் உள்ளது. இந்தப் பகுதியில் அரசு மற்றும் பட்டா நிலங்களில் மண் எடுக்க தடை விதித்தும், இப்பகுதிகளில் மண் எடுக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், சட்டவிரோதமாக மண் எடுப்பது தொடர்பாக விஏஓ-க்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இது சம்பந்தமான வழக்கை சிபிஐ போன்ற வேறு புலனாய்வு அமைப்புகள் வசம் ஒப்படைக்க வேண்டி வரும் என எச்சரித்த நீதிபதிகள், கோவை மாவட்ட மலையடிவார கிராமங்களில் சட்டவிரோதமாக மணல் திருடுபவர்களை கைது செய்து, இயந்திரங்களை பறிமுதல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x