Published : 20 Sep 2024 08:44 PM
Last Updated : 20 Sep 2024 08:44 PM

சைபர் குற்றத் தடுப்புக்கு நாடு முழுவதும் விதிகளை வகுக்கக் கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சைபர் குற்றங்களுக்காக தனியார் நிறுவனங்களின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு முன்பாக நாடு முழுவதும் விதிமுறைகளை வகுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் 4 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகப்படும் வகையில் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக குஜராத், கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா போலீஸாரின் உத்தரவுப்படி தங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் இரும்பு நிறுவனத்தின் இயக்குநரான அஜித்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “சைபர் குற்றங்களில் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு முன்பாக அதற்கான விதிமுறைகளை வகுத்து, அதை நாடு முழுவதும் உள்ள காவல்துறையினர் பின்பற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,” எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ. நடராஜன், “தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் வங்கிக் கணக்குளை முடக்குவதற்கு முன்பாக முறையாக நோட்டீஸ் கொடுத்து, எதற்காக வங்கி கணக்கை முடக்கப் போகிறோம், எந்த வழக்குக்காக முடக்கப் போகிறோம் என முன்கூட்டியே தகவல் தெரிவித்து அதன்பிறகே முடக்கம் செய்ய வேண்டும்,” என விதிமுறைகளை வகுக்க வேண்டும், என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம், சம்பந்தப்பட்ட கேரளா, கர்நாடக, மகராஷ்டிரா போலீஸார் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x