Published : 20 Sep 2024 06:35 PM
Last Updated : 20 Sep 2024 06:35 PM
திண்டுக்கல்: திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், அந்த கலப்பட நெய் தங்கள் தயாரிப்பு அல்ல என்று திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய் கலப்படமானது என்றும், அதில் பன்றிக் கொழுப்பு உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது 4 ஆய்வக பரிசோதனைகளிலும் உறுதியாகி இருப்பதாகவும் திருமலா திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று (செப். 20) செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி பெருமாள் கோயிலை நிர்வகிக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியமலா ராவ், “திருப்பதி பெருமாள் கோயிலுக்கு நெய் சப்ளை செய்பவர்கள் தரமான நெய்யை சப்ளை செய்கிறார்களா என்பதை பரிசோதிக்க கோயிலுக்குச் சொந்தமாக ஆய்வக வசதி இல்லை. வெளியே ஆய்வு செய்யலாம் என்றால், ஆய்வகக் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. நெய் சப்ளை செய்பவர்கள் இதை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளில் விலங்கு கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான நான்கு அறிக்கைகளும் ஒரே மாதிரியான முடிவுகளைத் தந்தன. எனவே நாங்கள் உடனடியாக விநியோகத்தை நிறுத்தினோம். மேலும் ஒப்பந்தக்காரரை பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளோம். அபராதம் விதிக்கும் நடைமுறையும் தொடங்கப்படும். அதோடு, சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த கலப்பட நெய்யை அனுப்பியது திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் என தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், ஜூன், ஜூலை மாதங்களில் திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் தொடர்ச்சியாக நெய் அனுப்பி வந்தோம். தற்போது நமது நெய் அங்கே அனுப்பப்படுவதில்லை.
எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புதான் என பொதுவாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எங்கள் தயாரிப்பான நெய் தற்போதும் சந்தையில் விற்பனையாகிறது. யார் வேண்டுமானாலும் அதன் தரத்தை பரிசோதித்துக்கொள்ள முடியும். அதில், எந்த குறைபாடும் இருக்காது. நாங்கள் இந்த துறையில் 25 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறோம். எங்கள் தயாரிப்புகள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் எப்போதும் வந்ததில்லை.
அதோடு, திருப்பதி பெருமாள் கோயிலுக்குத் தேவைப்படும் நெய்யில், நாங்கள் அனுப்பியது ஒரு சதவீதம்கூட இருக்காது. எங்கள் நெய் தொடர்பான ஆய்வக முடிவு எங்களிடம் உள்ளது. நாங்கள் திருப்பதிக்கு அனுப்பும்போதும், ஆய்வு அறிக்கையுடன்தான் அனுப்பினோம். அதில், எந்த குறைபாடும் கிடையாது என தெரிவித்தார்.
இதனிடையே, ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT