Published : 20 Sep 2024 06:32 PM
Last Updated : 20 Sep 2024 06:32 PM
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெட்ரோல் பங்க் உரிமையாளரை காரில் கடத்திய 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், 7 பேரை தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி ஜோதி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (50). இவர் நாலாட்டின்புதூர் விலக்கு பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்தப் பெட்ரோல் பங்கில் அவரது உறவினர் கழுகுமலையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
முத்துக்குமாருக்கு தொழிலில் நஷ்டம் காரணமாக கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் ராமகிருஷ்ணன் மூலமாக கடந்த 8 மாதங்களுக்கு தூத்துக்குடி வி.இ.சாலையை சேர்ந்த செல்வகுமார் (69) என்பவரிடம் ரூ.48 லட்சம் கடனாக வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அதன்பின்னர் முத்துக்குமார் வட்டியும், அசல் தொகையும் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
இதுகுறித்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ராமகிருஷ்ணன் கழுகுமலை மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலையங்களில் முத்துக்குமார் மீது புகார் அளித்திருந்தார். இந்நிலையில் செல்வகுமார் அசல் மற்றும் வட்டி கேட்டு ராமகிருஷ்ணனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். அப்போது தான் கடன் வாங்கி தனது உறவினர் முத்துக்குமாருக்கு கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் நாலாட்டின்புதூர் விலக்கு பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருவது குறித்தும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று (செப்.20) காலை 11.30 மணியளவில் முத்துக்குமார் தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் தனது பெட்ரோல் பங்குக்கு சென்று கொண்டிருந்தார். கோவில்பட்டி அருகே சங்கரன்கோவில் செல்லும் அணுகு சாலையில் சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்து 2 கார்களில் வந்த 9 பேர் முத்துக்குமாரை வழிமறித்து நிறுத்தினர்.
பின்னர் அவரை மிரட்டி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றினர். அப்போது நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் இருந்து கோவில்பட்டி செல்வதற்காக மற்றொரு அணுகு சாலையில் காவல் உதவி ஆய்வாளர் டி.அருள் சாம்ராஜ் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அவர் காரில் ஒருவரை வலுக்கட்டாயமாக ஏற்றுவதை கவனித்து, உடனடியாக செல்போன் மூலம் காவலர்களுக்கு தகவல் அளித்து, அவர்களையும் அழைத்துக் கொண்டு கார்களை துரத்திச் சென்றார். கோவில்பட்டி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் கட்டாலங்குளம் விலக்கு பகுதியில் காரை வழிமறித்து நிறுத்தினார்.
அப்போது முதல் காரில் இருந்த ஓட்டுநர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். பின்னால் வந்த காரில் இருந்த 5 பேரும் காரிலேயே தப்பி சென்றனர். முத்துக்குமாரின் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு வந்த நபரும் அவர்களுடன் தப்பி சென்று விட்டார்.
இதையடுத்து முத்துக்குமாரை மீட்ட காவல் உதவி ஆய்வாளர் அருள் சாம்ராஜ் மற்றும் போலீஸார், காரில் இருந்த 2 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தூத்துக்குடி வி.இ.சாலையைச் சேர்ந்த செல்வகுமார், திருநெல்வேலி சங்கர் நகரைச் சேர்ந்த ஐயப்பன் (46) என்பதும், கடனை வசூலிப்பதற்காக அவரை கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீஸார், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கடத்தலில் தொடர்புடைய 7 பேரை தேடி வருகின்றனர். பாஜக கொடி, திமுக எம்.பி. பாஸ்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் முன் பகுதியில் பாஜக கொடி கட்டப்பட்டிருந்தது. காருக்குள் ஒரு வாக்கி டாக்கி இருந்தது. மேலும், திமுக எம்பி முகமது அப்துல்லாவின் கார் பாஸூம் இருந்தது. கைது செய்யப்பட்டுள்ள செல்வகுமார் பாஜகவில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT