Last Updated : 20 Sep, 2024 06:27 PM

 

Published : 20 Sep 2024 06:27 PM
Last Updated : 20 Sep 2024 06:27 PM

“திமுகவுடனான உறவு எப்போதும் தொடரும்” - காதர் மொகிதீன் திட்டவட்டம்

கே.எம்.காதர் மொகிதீன் | கோப்புப்படம்

தென்காசி:திமுகவின் கொள்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். அவை நாட்டுக்கு தேவையானவை. அந்த அடிப்படையில் திமுகவுடன் எங்கள் உறவு அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது, நாளையும் இருக்கும்,” என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் கூறியுள்ளார்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் இன்று (செப்.20) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மாற்று மதம் குறித்து எந்தவிதமாக விமர்சனங்களையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செய்யாது. ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். வெளிநாட்டில் ராகுல் காந்தி என்ன பேசினார் என்பது குறித்து தெரியாது.

இந்தியா ஒரே நாடு தான். நாடு முழுவதும் 4,698 சாதிகள் உள்ளன. இந்தியாவுக்கு சமமான பெருமை உள்ள நாடு வேறு எங்கும் இல்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நாட்டை இந்துத்துவா நாடாக மாற்றுவதற்கான முதல் முயற்சி. இந்த நோக்கம் நிறைவேறினால் மாநில உரிமைகள் பாதிக்கப்படும். சிறுபான்மை மக்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும். இதனால்தான் இந்த திட்டத்தை எதிர்க்கிறோம்.

வக்பு திருத்தச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 44 திருத்தங்களும் தவறு என்று நாங்கள் சொல்லவில்லை. ஏற்றுக்கொள்ளக்கூடிய திருத்தங்களும் உள்ளன. ஏற்றுக்கொள்ள முடியாத திருத்தங்களும் உள்ளன. திருத்தங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டால் நன்மைகளை விட தீமைகளே அதிகமாகிவிடும். அதனால் திருத்தங்களை முறைப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளோம். வக்பு வாரியத்தை அழிக்கும் வகையில் திருத்தங்கள் இருக்கக் கூடாது.

திமுகவில் அண்ணாவுக்கு பின்னர் கருணாநிதி, அவருக்கு பின்னர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். அண்ணா, கருணாநிதி கருத்துகளை உட்படுத்திதான் திராவிட மாடல் ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின். அடுத்து உதயநிதி ஸ்டாலின் வந்தாலும் அதே கொள்கையைத்தான் செயல்படுத்துவார். திமுகவின் கொள்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். அவை நாட்டுக்கு தேவையானவை. அந்த அடிப்படையில் திமுகவுடன் எங்கள் உறவு அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது, நாளையும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x