Last Updated : 20 Sep, 2024 06:09 PM

 

Published : 20 Sep 2024 06:09 PM
Last Updated : 20 Sep 2024 06:09 PM

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம்: முதல்வர் ஒப்புதல்

கோப்புப்படம்

சென்னை: திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பகுதியில் ரூ.17.60 கோடியில் வெளியூர் செல்லும் தனியார் சொகுசு (ஆம்னி) பேருந்து நிலையம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சிராப்பளளி மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகை காரணமாகவும், ஏற்கெனவே அமைந்துள்ள 2 பேருந்து நிலையங்கள் போதுமானதாக இல்லாததாலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், தற்போது பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வெளியூர் செல்லும் தனியார் சொகுசுப் பேருந்து நிலையம் 4 ஏக்கரில் அமைய உள்ளது.

இப்பேருந்து நிலையம் 30,849 சதுரடி பரப்பிலான 2 பேருந்து நடைமேடைகளுடன், 82 பேருந்துகளை கையாளும் வசதியுடன், 37 இயக்கப்படும் பேருந்து நிறுத்த தடங்கள், 45 காத்திருப்பு பேருந்து நிறுத்த தடங்களுடன் 1,42,945 சதுரடியில் அமைகிறது. மேலும், இ்ப்பேருந்து நிலையம், மழைநீர் வடிகால், சுகாதாரமான குடிநீர், 2 கழிப்பறை வளாகம், 17 இருக்கை கழிவறைகள், 31 சிறுநீர் கழிவறைகள், கண்காணிப்பு கேமரா, பொதுமக்கள் சேவை மையம் மற்றும் இதர வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பகுதியில், மூலதன மானிய நிதி, இயக்குதல் மற்றும் பராமரிப்பு நிதியின்கீழ் ரூ.17.60 கோடி மதிப்பில் இந்த பேருந்து நிலையம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இந்த தனியார் சொகுசு பேருந்து நிலையம், தென் மாவட்டங்களில் இருந்தும், திருச்சிராப்பள்ளி மாநகரில் இருந்தும், சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் தனியார் சொகுசு பேருந்துகளின் எளிதான போக்குவரத்துக்கும் அவற்றின் ஓட்டுநர் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் பெரும் பயனளிக்கும்.

ஒசூர் பேருந்து நிலையத்துக்கு ரூ.10 கோடி நிதி; அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரண்டபள்ளி ஊராட்சிக்குட்பட்ட மொரணப்பள்ளி கிராமத்தில் ஒசூர் மாநகராட்சியால் ரூ.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கடந்த 2022-ம் ஆண்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. தரைத்தளம் வரையிலான கட்டுமானத்துக்கான இந்த அனுமதியின் அடிப்படையில் தற்பாது பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

பெங்களூரு நகரத்துக்கு அருகில் அமைந்துள்ளதால் இப்புதிய பேருந்து நிலையத்தில் அதிக எண்ணிக்கையிலான பேருந்துகளின் போக்குவரத்து எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இப்புதிய பேருந்து நிலையத்தில் சுற்றுச்சுவர், மழைநீர் வடிகால், தண்ணீர் தொட்டி, குடிநீர், கழிவுநீர் செல்லும் வசதிகள் மேற்கொள்ள ரூ.10 கோடிக்கு நி்ர்வாக அனுமதி வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x