Published : 20 Sep 2024 05:27 PM
Last Updated : 20 Sep 2024 05:27 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் திரு அண்ணாமலையில் இன்று (செப்டம்பர் 20-ம் தேதி) தீ விபத்து ஏற்பட்டு ஒரு ஏக்கர் சேதமடைந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
மலையே மகேசன் என திருவண்ணாமலையில் உள்ள மகா தீபம் ஏற்றப்படும் “திரு அண்ணாமலையை” பக்தர்கள் வணங்குகின்றனர். 14 கி.மீ., தொலைவு கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். திரு அண்ணாமலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், சிறப்பு குழுவை அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை உள்ள பச்சையம்மன் கோயில் அருகே ‘திரு அண்ணாமலையில்’ இன்று (செப்டம்பர் 20-ம் தேதி) முற்பகல் தீப்பற்றி எரிந்தது. வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக தீவிரமாக இருந்ததால், மலையில் இருந்த செடிகள் மற்றும் மரங்களில் வேகமாக தீ பரவி, கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் திரு அண்ணாமலையில் வாழ்ந்து வரும் மான்கள், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள், அபாய குரல் எழுப்பியவாறு பாதுகாப்பான இடத்தை தேடி ஓடியது. மேலும் சில விலங்குகள் தீயில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
தீப்பற்றி எரிவது குறித்து, அப்பகுதி மக்கள் தெரிவித்த தகவலின் பேரில், திருவண்ணாமலை வனத்துறையினர், திரு அண்ணாமலைக்கு சென்று நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து வனச்சரகர் சரவணன் கூறும்போது, “திரு அண்ணாமலை காப்புக்காட்டில் தீப்பற்றி எரியும் தகவல் கிடைத்ததும், 3 வனத்துறையினர் விரைந்து சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.
வெளி நபர்கள் தீ வைத்திருப்பதற்கு வாய்ப்பு குறைவு. வெளியில் தாக்கம் அதிகம் உள்ளதால், தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம். சுமார் ஒரு ஏக்கர் இடம் எரிந்து சேதமடைந்தது. இயற்கையான தீ விபத்து தான்” என்றார். பக்தர்கள் கூறும் போது, “திரு அண்ணாமலையில் சமூக விரோத கும்பல் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. அவர்களால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. அவர்களது நடமாட்டத்தை வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தினால், திரு அண்ணாமலையில் தீப்பற்றி எரியாது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT