Published : 20 Sep 2024 05:23 PM
Last Updated : 20 Sep 2024 05:23 PM
சென்னை: “விசிக, காங்கிரஸ் போல தவெக கட்சியும் திமுகவின் இலவச இணைப்பு என்றும், பெரியார் சிலைக்கு விஜய் மாலை போட்டு தான் மாநாட்டுக்கு அனுமதி வாங்கியிருக்கிறார்,” என்றும் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
தமிழக பாஜக சார்பில் சென்னை மேற்கு மாம்பலம் சீனிவாச அய்யர் தெருவில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று (செப்.20) நடந்தது. இதில் பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நடிகர் விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைத்திருந்தாலும், திமுக ஒத்துழைத்தால் தான் அரசியல் வாழ்க்கையை நடத்த முடியும் என்ற நிலைக்கு அவர் வந்துவிட்டார். பெரியார் சிலைக்கு விஜய் மாலை போட்டதும் இதைத்தான் காட்டுகிறது. மாநாடு நடத்த முடியாமல், பல சிக்கல்களை சந்தித்து விஜய் மூச்சுத்திணறலில் இருந்தார். இப்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.திமுகவின் ஒரு அங்கமாக, இலவச இணைப்பாக விஜய் மாறிக்கொண்டு இருக்கிறார்.
தற்போதுகூட பெரியார் சிலைக்கு மாலை போட்டதால் தான் விஜய் கட்சி மாநாட்டுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. திமுக அரசுக்கு மாற்றாக இருப்பது தான் விஜய்யின் நோக்கம் என்றால், கொள்கையிலும் மாற்றம் வேண்டும். கொள்கையில் மாற்றம் இல்லாமல், திமுகவின் கொள்கைகளையே காப்பியடித்து சொல்லிக் கொண்டிருந்தால் மக்கள் விஜய்யை ஒரு மாற்றாக கருதமாட்டார்கள். கடைசி வரை, விசிக, காங்கிரஸ் போல திமுகவின் இலவச இணைப்பாகத்தான் விஜய் இருப்பார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிப்பதில் மிருக கொழுப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சொல்லியிருக்கிறார். இது உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் இது நடந்திருக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கருணை இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.
ஏற்கெனவே புதுச்சேரியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது கே.பாண்டியன் கொலை வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தேன். மாநில அரசு, பாண்டியன் கொலை வழக்கை வாபஸ் பெறுவதாக கூறியதால் தான், செல்வப்பெருந்தகை அந்த வழக்கில் இருந்து விடுதலையானார். ஆரம்பத்தில் இருந்து இந்த வழக்கில் மர்மம் நீடித்துக்கொண்டே தான் இருக்கிறது. தற்போது பகுஜன் சமாஜ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், ராகுல் காந்திக்கு 4 பக்க கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.எனவே, அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
ஏற்கெனவே காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனுக்கும் அவரது தந்தைக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அஸ்வத்தாமன் செல்வப்பெருந்தகையுடன் இருந்தவர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மிகப்பெரிய குற்றப்பின்னணி கொண்டவர்கள் எல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையையும் கைது செய்ய வேண்டும். காங்கிரஸ் மாநில தலைவராக இருப்பதற்கு அவருக்கு தகுதி கிடையாது.
ராகுல்காந்தி அந்நிய மண்ணில் இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டு கொண்டிருக்கிறார். வங்க தேசத்தில் இந்துக்கள் மீதும், இந்துக் கோயில்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு காரணமானவர்களுடன் ராகுல்காந்தி அளவளாவிக் கொண்டிருக்கிறார். பிரதமருக்கு எதிரான ராகுல் காந்தியில் பேச்சுக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாஜக ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் ராகுலுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...