Published : 20 Sep 2024 02:40 PM
Last Updated : 20 Sep 2024 02:40 PM

இரு தரப்பினர் மோதல்: கரூர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை; விசிகவினர் 40 பேர் கைது

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.

கரூர்: காணியாளம்பட்டி தாக்குதல் சம்பவத்திறுகு நீதி கேட்டு இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விசிகவினர் 40 பேரை தாந்தோணிமலை போலீஸார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் காணியாளம்பட்டியில் பேக்கரி நடத்தி வருபவர் மணிகண்டன். பாப்பனம்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் செப். 8ம் தேதி மாயனூர் காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைத்துவிட்டு மணிகண்டனின் பேக்கரியில் அமர்ந்திருந்தனர். அப்போது, அங்கு வேப்பங்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பழுது ஏற்பட்டு அதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அதிகளவில் சப்தம் எழுந்துள்ளது.

பாப்பனம்பட்டி இளைஞர்கள் இதனை தட்டிக்கேட்டதில் இருதரப்புக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் பேக்கரிக்குள் புகுந்தும் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதில் சிலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வேப்பங்குடியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்னர்.

இந்த நிலையில் கடந்த 16ம் தேதி ஊராளிக்கவுண்டர் கூட்டமைப்பு, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களை திரட்டி தரகம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். இதனிடையே, வேப்பங்குடியைச் சேர்ந்தவர்கள் செப்.16ம் தேதி காவல் கண்காணிப்பாளரிடம் பேக்கரி உரிமையாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிககை எடுக்க மனு அளித்தனர்.

முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டு காவல் துறை வாகனத்தில் ஏற்றப்படுகின்றனர்.

இது தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையில், இதற்காக மாவட்ட ஆட்சியரிடம் நீதி கேட்டு கரூர் மாவட்ட விசிக சார்பில் இன்று காலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து தாந்தோணிமலை போலீஸார் 17 பெண்கள் உள்ளிட்ட 40 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x