Published : 19 Sep 2024 08:14 PM
Last Updated : 19 Sep 2024 08:14 PM

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் 2,000 ஏக்கர் நிலங்களை விற்றதாக புகார்: அரசிடம் அறிக்கை கேட்கும் ஐகோர்ட்

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துள்ளதாக அறநிலையத் துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அது தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த போது ஆண்டுக்கு ரூ. 3 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில், தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு, ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் மட்டுமே வருமானம் ஈட்டி வருவதால் கோயில் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி அறநிலையத்துறை ஆணையர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், எஸ். சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில், கோயிலின் தணிக்கை செய்யப்பட்ட வரவு - செலவு கணக்கு தொடர்பான விவரங்கள் மூடி முத்திரையிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் “கோயிலுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை வட்டாட்சியர் நிர்வகித்து வருகிறார். அந்த நிலத்திலிருந்து வாடகை வருவாயாக வெறும் ரூ.93 ஆயிரம் மட்டுமே பெறப்படுகிறது. நடராஜர் கோயிலுக்கு மன்னர்கள் மற்றும் புரவலர்கள் சுமார் மூன்றாயிரம் ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய நிலையில் தற்போது ஆயிரம் ஏக்கர் மட்டுமே உள்ளது. எனவே, அதுகுறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

அதேபோல கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வழங்கும் தட்சணைகளை தீட்சிதர்கள் எடுத்துச்சென்ற போதிலும் கோயில் நிர்வாகத்துக்கு தேவைப்படும் பட்சத்தில் பங்களிப்பு தொகையை வழங்கப்படுகிறது. காணிக்கைக்கான வரவு, செலவு கணக்கை பராமரிக்க தனி திட்டம் வகுக்க தயாராக இருப்பதாகவும்,” தெரிவிக்கப்பட்டது. அப்போது, “அறநிலையத்துறை சார்பில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு 3 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்த நிலையில், அதில் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் அவர்கள் இஷ்டப்படி தனி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக,” குற்றம் சாட்டப்பட்டது.

இருதரப்பு வாதங்களும் தங்களுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், கடந்த 2017-18 முதல் 2021-22 வரையிலான வரவு செலவு கணக்கு புத்தகங்களை தாக்கல் செய்ய தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும், பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகள், செலவுகள் குறித்து கணக்கு வைப்பதற்கான நடைமுறையை உருவாக்கி, அதன் வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தீட்சிதர்கள் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கோயிலுக்கு சொந்தமாக தற்போது எவ்வளவு ஏக்கர் நிலம் உள்ளது என்பது குறித்து வட்டாட்சியர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். அத்துடன் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் தனிநபர்களுக்கு விற்பனை செய்தது தொடர்பான விவரங்களை ஆவணங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.3-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x