Published : 19 Sep 2024 06:53 PM
Last Updated : 19 Sep 2024 06:53 PM
சென்னை: ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதில், தமிழகத்தில் சென்னை மையத்தில் 650 பேர் தேர்வெழுதுகின்றனர்.
ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ். ஐஏஏஎஸ், ஐஐஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் பதவிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) நடத்தப்படும் இத்தேர்வு, முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு என 3 நிலைகளை உள்ளடக்கியது.அந்த வகையில் இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் பணிகளில் 1,056 காலியிடங்களை நிரப்புவதற்காக முதல்நிலைத்தேர்வு நடத்தப்பட்டு மெயின் தேர்வுக்கு மொத்தம் 14,627 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களில் 650 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மெயின் தேர்வு செப்டம்பர் 20 முதல் 29-ம் தேதி வரை சென்னை உள்பட நாடு முழுவதும் 24 மையங்களில் நடைபெறும் என யுபிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, மெயின் தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தமிழகத்தில் சென்னை உள்பட நாடு முழுவதும் 24 நகரங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. மொத்தம், 14,627 பேர் தேர்வெழுதுகின்றனர்.
சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் 650 பேர் தேர்வெழுதுகின்றனர். தேர்வின் முதல் நாளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை கட்டுரைத்தாள் தேர்வு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, 21-ம் தேதி காலை பொதுஅறிவு தாள்-1-ம், பிற்பகல் பொது அறிவு தாள்-2-ம், 22-ம் தேதி காலை பொது அறிவு தாள் -3-ம், பிற்பகல் பொது அறிவு தாள்-4-ம் நடைபெறும். அதன்பிறகு 28-ம் தேதி காலை மொழித்தாள் தேர்வும், பிற்பகல் ஆங்கிலம் தாள் தேர்வும் கடைசி நாளான 29-ம் தேதி காலையும் பிற்பகலும் விருப்பப் பாடங்களுக்கான தேர்வுகளும் அடுத்தடுத்து நடைபெற உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT