Last Updated : 19 Sep, 2024 04:28 PM

19  

Published : 19 Sep 2024 04:28 PM
Last Updated : 19 Sep 2024 04:28 PM

“திமுக தொண்டர்கள் உழைக்க... கருணாநிதி குடும்பம் பிழைக்கும்!” - தமிழிசை கடும் விமர்சனம்

கோவை: “திமுக நூற்றாண்டு விழா கொண்டாடும் போது உதயநிதி தலைமை, 125-ம் ஆண்டு விழாவின்போது அவரது மகன் தலைமை என திமுக தொண்டர்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். கருணாநிதி குடும்பம் பிழைத்துக் கொண்டே இருக்கும்” என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

கோவையில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று கோவை வந்த தமிழிசை, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நல்ல முடிவு; வரவேற்கத்தக்கது. இதனால் மக்களின் நேரம், வரிப்பணத்தை சேமிக்க முடியும். முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வருவதாக தமிழக அரசு கூறி வரும் நிலையில், சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்கிறது. கமிஷன், ஊழல் என கம்யூனிஸ்ட்கள் உள்ள வரை தமிழகத்தில் தொழிற்சாலைகளை சிறப்பான முறையில் நடத்த முடியாது.

குழந்தைகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் முட்டை சந்தைகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. கல்வித் துறையில் முறைகேடுகள் நடக்கின்றன. இது குறித்து கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மது ஒழிப்பு மாநாடு நடத்தும் திருமாவளவனின் நடவடிக்கை கூட்டணியை விரிவுபடுத்தவா அல்லது கூட்டணிக்குள் விரிசல் ஏற்படுத்தவா என்பதுதான் இன்று பலரின் கேள்வியாகும். திருமா எதிர்பார்த்த திருப்பம் நடக்கவில்லை. முதல்வரை சந்தித்த பின் மிரண்டு வந்தார்.

அமைச்சர் உதயநிதி குறித்து வதந்தி வெளியானது. நல்ல நாள் இல்லை என்பதால் பகுத்தறிவுவாதிகளாகிய அவர்கள் இப்போது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். பவள விழா தொண்டர்களுக்காக நடத்தப்பட்டது அல்ல. உதயநிதி முடிசூடுவதற்கான ஆரம்ப விழா அது. திமுகவின் நூற்றாண்டு விழா கொண்டாடும் போது உதயநிதி தலைமை, 125-வது ஆண்டு விழாவின்போது உதயநிதியின் மகன் தலைமை என திமுகவில் தொண்டர்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதைக் கொண்டு கருணாநிதி குடும்பம் பிழைத்துக்கெண்டே இருக்கும்.

தமிழகத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை, சேவை நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்த தலைமை அறிவுறுத்தியுள்ளது. எனவே, அப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி சட்டம் தொடர்பாக தவறான கருத்து நிலவி வருகிறது. முன்பு பன்னுக்கு 12 சதவீத வரி இருந்தது. தற்போது 5 சதவீதமாக குறைந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x