Published : 19 Sep 2024 03:00 PM
Last Updated : 19 Sep 2024 03:00 PM

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை கண்டித்து தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை  தலைமையில் நடைபெற்றது.

சென்னை: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை கண்டித்து சென்னையில் இன்று (செப்.19) நடைபெற்ற தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் இன்று (செப்.19) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் ஹெக்டே மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், பிரதமர் மோடி தலைமயில் மத்திய அரசு அமைந்தது முதற்கொண்டு அதிகாரங்களை குவித்து தலைநகர் டெல்லியில் அமர்ந்து கொண்டு இந்தியாவை ஆள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் பின்னணியில் எடுத்தது தான் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த அமைச்சரவையின் முடிவாகும்.

கடந்த 75 ஆண்டுகளாக நாடாளுமன்ற ஜனநாயகம் செழுமைப்படுகிற வகையில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. அமைதியான முறையில் ஆட்சி மாற்றமும் நிகழ்ந்து வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மத நல்லிணக்கத்தோடு அரசமைப்புச் சட்டப்படி செயல்படுவதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை அறிமுகம் செய்திருப்பதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டுவர தொடர்ந்து முயற்சிப்பது, புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் கூறுவது கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பதாகும், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x