Published : 19 Sep 2024 02:40 PM
Last Updated : 19 Sep 2024 02:40 PM

“கூட்டணிக்குள் இருப்பவர்கள் அரசியல் பேசுவதை பிறர் அரசியலாக்குவது சூழ்ச்சி” - திருமாவளவன்

கும்பகோணம்: “திமுக கூட்டணிக்குள் இருப்பவர்கள் அரசியல் பேசுவதை, கூட்டணிக்கு வெளியில் இருப்பவர்கள் அரசியலாக்குவது ஏற்புடையதல்ல. அது சூது, சூழ்ச்சி நிறைந்த அரசியலாகும்” என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருவிடைமருதூர் வட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்பதற்காக இன்று வந்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணிக்குள் இருக்கின்ற ஒவ்வொரு கட்சியும், பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற கட்சிகள். விசிக தேர்தல் அரசியலுக்கு வந்து கால் நூற்றாண்டு கடந்து விட்டது. எனவே, கூட்டணியில், எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும், என்ன கோரிக்கை வைக்க வேண்டும் என்பது விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களுக்கு தெரியும்.

திமுக கூட்டணிக்குள் இருப்பவர்கள் அரசியல் பேசுவதை, கூட்டணிக்கு வெளியில் இருப்பவர்கள் அரசியலாக்குவது ஏற்புடையதல்ல. அது சூது, சூழ்ச்சி நிறைந்த அரசியலாகும். டெல்லியில் இருப்பதைப் போல ஒரு கூட்டணி ஆட்சி தமிழகத்தில் உருவாக வேண்டும் என்றால், தமிழகத்தை ஆண்ட, ஆளுங்கட்சியாக இருக்கின்ற திமுக, அதிமுக, இன்னும் தனித்து ஆட்சி செய்யக்கூடிய, அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இயலாத நிலையிலேயே மக்கள் ஆதரவைப் பெற்று இருக்கிறார்கள் என்று பொருள்.

இந்த அடிப்படையை உணராத கட்சி அல்ல விசிக. 1999-ம் ஆண்டு முதன் முதலாக தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது, ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று தான் முழக்கமிட்டோம். எனவே, விழிப்புணர்வு இல்லாத கட்சி அல்ல நாங்கள். இது பல ஆண்டுகளைக் கண்ட காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் தெரியாதது இல்லை. இந்த ஆட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டும் என்பது ஆளுநரின் திட்டம். இந்தியாவிலேயே மிகச் சிறப்பான கல்வித் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிற மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

உயர் கல்வி படிப்பதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இன்னும் மருத்துவம், பொறியியல் போன்ற கல்விக்கு வட இந்திய மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து படிக்கிறார்கள். ஆகவே, தமிழகத்தின் கல்வி தரம் தாழ்ந்து போய்விட்டது என்பது ஆளுநரின் அரசியல் விமர்சனம். அவர் அரசியல்வாதியாகத்தான் இருக்கிறாரே தவிர, தான் ஒரு ஆளுநர் என்பதையே அவர் மறந்துவிட்டார்.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x