Published : 19 Sep 2024 02:31 PM
Last Updated : 19 Sep 2024 02:31 PM
பூந்தமல்லி: அத்வானி யாத்திரை சென்ற வழியில் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் கைதானவர் பூந்தமல்லி கிளை சிறையில் இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2011 -ம் ஆண்டு பாஜக சார்பில் மதுரையில் நடந்த ரத யாத்திரையின் போது திருமங்கலம் அருகே அத்வானி சென்ற பகுதியில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் கைதான ஜாகிர் உசேன் (37), புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், பாதுகாப்பு கருதி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், நேற்று இரவு சிறையில் இருந்த ஜாகிர் உசேன் எறும்பு பவுடரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்ட ஜாகிர் உசேன், அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சிறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், ஜாகிர் உசேனிற்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதாகவும், ஜாமீன் கிடைத்தும் அதற்கான உரிய ஆவணங்கள் மற்றும் தொகையை சமர்ப்பிக்க முடியாததால் அவரால் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியிலிருந்து வந்த ஜாகிர் உசேன் சிறையில் எறும்பு மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரியவந்துள்ளது.
சிறைக்குள் எறும்பு மருந்து எப்படிக் கிடைத்தது என்பது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாமீன் கிடைத்தும் வெளியே செல்லமுடியாத விரக்தியில் சிறையில் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பூந்தமல்லி சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT