Published : 19 Sep 2024 12:07 PM
Last Updated : 19 Sep 2024 12:07 PM
அரியலூர்: “சோழர்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கும் போது, நமது தமிழர்களின் வரலாற்று தொன்மை உலகிற்கு தெரியவரும். தற்போது அதனை அழிக்க சிலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.” என போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காங்கிரஸ் சார்பில், மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு கங்கைகொண்ட சோழபுரத்தில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி அறிவித்தல் மற்றும் பாராட்டு விழா நேற்று (செப்.18) நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஆ.சங்கர் தலைமையில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “ராஜேந்திர சோழனின் ஆளுமை மற்றும் அவரின் வெற்றிகளை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து முதல் கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. சோழர்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கும் போது, நமது தமிழர்களின் வரலாற்று தொன்மை உலகிற்கு தெரிய வரும். தற்போது அதனை அழிக்க சிலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிந்து சமவெளி நாகரிகமே இல்லை எனக்கூறி அதற்கு வேறு பெயர் சூட்ட துடிக்கிறார்கள். சோழர்களை விட மற்ற மன்னர்களின் வரலாற்றை பெரிதுபடுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். எனவே சோழ மன்னர்களின் பெருமைகள், அவர்களின் வரலாறுகள் ஆகியவற்றை நிலை நிறுத்த வேண்டும் என்றால் இவ்வகையான அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
ராஜேந்திர சோழன் மீது உள்ள பற்றின் காரணமாக இப்பகுதியில் உள்ள கிராமங்களில் குறைந்தது 5 பேருக்காவது ராஜேந்திரன் என பெயர் சூட்டி வருகிறார்கள். ராஜேந்திர சோழனின் தந்தை ராஜராஜ சோழன் ஆட்சி செய்த தஞ்சாவூரில் கூட ராஜராஜன் என்கிற பெயரை விட ராஜேந்திரன் என்ற பெயரையே அதிக அளவில் சூட்டியுள்ளார்கள் என ஆய்வில் தெரிய வருகிறது. பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த பகுதியில் கூட ராஜேந்திரன் என்ற பெயர் அதிக அளவில் உள்ளது.
ராஜேந்திர சோழனின் ஆளுமை அவரின் வெற்றி ஆகியவற்றை பறைசாற்றும் வகையிலேயே இவ்வகையான ராஜேந்திரன் என்ற பெயரை மக்கள் அதிக அளவில் சூட்டி வருகின்றனர். இவ்வாறு சிறப்பு வாய்ந்த ராஜேந்திர சோழன் நமது மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தது நமக்கெல்லாம் பெருமை சேர்க்க கூடியதாகும். எனவே ராஜேந்திர சோழனுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT