Published : 19 Sep 2024 06:12 AM
Last Updated : 19 Sep 2024 06:12 AM

776 இடங்களில் சாலையோர கடைகள்: அனுமதி வழங்க சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் 776 இடங்களில் சாலையோர வியாபாரத்தை அனுமதிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளின் நலனைக் காக்கவும், சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்தவும் சென்னை மாநகராட்சி சார்பில் நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளார்.

மாநகரம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நகர விற்பனைக் குழு உறுப்பினர்களும் தேர்தல் மூலம் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரம் அனுமதிக்கப்பட்ட பகுதி, தடை விதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காணுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வட்டாரத்துக்கு ஒன்று வீதம் 3 மாதிரி சாலையோர வியாபார வளாகங்களை உருவாக்கவும் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, வட சென்னையில் மகாகவி பாரதி நகர், மத்திய சென்னையில் அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட பார்க் சாலை, தென் சென்னையில் பெசன்ட் நகர் 2-வது நிழல் சாலை ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பகுதிகளை மாதிரி வியாபார வளாகங்களாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மகாகவி பாரதி நகரில் நடைபாதையை சமமாகப் பிரித்து, ஒரு பகுதியில் வியாபாரிகள் கடை வைக்கவும், ஒரு பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லவும் வழிவகை செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அம்பத்தூர் பகுதியில் நடைபாதையில் கடை வைக்கும் பகுதிகள் வண்ணம் தீட்டப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து, விற்பனை பகுதி, விற்பனைக்கு அனுமதி இல்லாத பகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது வருவாய்த் துறை சார்பில், 776 இடங்களில் சாலையோர வியாபாரத்தை அனுமதிக்கலாம் என்றும், 491 இடங்களில் சாலையோர வியாபாரத்துக்கு தடை விதிக்கலாம் என்றும் பரிந்துரை வழங்கப்பட்டது. இதை நகர விற்பனைக் குழு பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x