Last Updated : 18 Sep, 2024 09:50 PM

16  

Published : 18 Sep 2024 09:50 PM
Last Updated : 18 Sep 2024 09:50 PM

“2026 தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள்” - தமிழிசை உறுதி

தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப்படம்

சென்னை: “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள்,” என பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சென்னையில் நடைபெற்ற திமுகவின் பவள விழா கொண்டாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பேச்சு, அவர் தமிழகத்தின் உண்மை நிலையை அறிந்து பேசுகிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், உழவர்கள், நெசவாளர்கள் என விளிம்புநிலை மக்களை கல்வி, வேலைவாய்ப்பில் உன்னத நிலைக்கு உயர்த்தி உள்ளோம் என்கிறார் ஸ்டாலின்.

ஆனால், அவர் குறிப்பிடும் அனைத்துப் பிரிவினரும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இன்னமும் விளிம்பு நிலையிலேயேதான் இருக்கிறார்கள். அவர்களின் இந்த நிலையை பயன்படுத்தித்தான் ஒவ்வொரு தேர்தலின்போதும் திமுக அவர்களுக்கு கொடுப்பதை கொடுத்து, வாக்குகளைப் பெற்று வருகிறது. தமிழகத்தில் ஜனநாயகத்துக்கு உயிர்கொடுக்க வேண்டுமானால், திமுக எனும் தீய சக்திக்கு முடிவுரை எழுதியாக வேண்டும்.

இதற்கான மிகப் பெரிய பொறுப்பு ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், உழவர்கள், நெசவாளர்கள் என விளிம்பு நிலை மக்களின் கைகளில்தான் உள்ளது. பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெறும் மோசடியை தொடர்ந்து, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுக்கும் அடுத்த மோசடியிலும் திமுக ஒவ்வொரு தேர்தலிலும் தீவிரம் காட்டி வருகிறது.கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக கொடுத்து, நிறைவேற்றாத வாக்குறுதிகள் ஏராளம் இருக்கிறது.

வாக்குறுதிகளே நிறைவேற்றப்படாத நிலையில், 2024 மக்களவைத் தேர்தலின்போது அக்கட்சி கொடுத்த வாக்குறுதிகளையும் சேர்த்தால் திமுக ஒரு அரசியல் கட்சியா அல்லது ஏமாற்று கட்சியா என்ற கேள்வி ஒவ்வொரு தமிழரின் மனதிலும் எழுவதை தவிர்க்க முடியாது. தொடர் வரி விதிப்பு, திறமையற்ற நிர்வாகம், வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, நிறைவேற்றிவிட்டதாக பொய் பேசுவது, ஒவ்வொரு துறையிலும் அதிகரித்திருக்கும் ஊழல் போன்றவற்றால் தமிழக மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். வரும் தேர்தல் திமுகவுக்கு முடிவுரை எழுதும் தேர்தலாக நிச்சயம் இருக்கும். தமிழக மக்கள் இதை சாதிப்பார்கள். ஏமாற்றியே ஏற்றம் கண்டவர்கள் 2026-ல் தோற்று போவார்கள் என்பது நிதர்சனம்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x