Published : 18 Sep 2024 07:54 PM
Last Updated : 18 Sep 2024 07:54 PM

திருவள்ளுவர் பிறந்த நாளை வைகாசி அனுஷம் நட்சத்திரத்தில் கொண்டாட அரசுக்கு உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு

சென்னை: திருவள்ளுவரின் பிறந்த நாளை வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்று கொண்டாட அரசுக்கு உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தமிழ் மாதம் தை 2-ம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தை தமிழக அரசு விடுமுறை நாளாக அனுசரிக்கிறது. ஆனால் உண்மையில், திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால் அன்றைய தினத்தை திருவள்ளுவர் பிறந்த தினமாக அறிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என திருவள்ளுவர் திருநாள் கழகத் தலைவரான பேராசிரியர் டாக்டர் சாமி தியாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ். பத்மா, “கடந்த 1935-ம் ஆண்டு நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்கள், வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் தான் திருவள்ளுவர் பிறந்ததாக குறிப்பிட்டுள்ளனர். 600 ஆண்டுகளுக்கு முன்பாக மயிலாப்பூரில் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலில், வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்று தான் திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, அன்றைய தினத்தை திருவள்ளுவர் பிறந்த தினமாக அறிவிக்க வேண்டும்” என வாதிட்டார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்து வாதிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2-ம் தேதி திருவள்ளுவரை போற்றும் விதமாக திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் அந்த நாள், திருவள்ளுவர் பிறந்த தினமாக அறிவிக்கப்படவில்லை. மனுதாரர் கூறுவது போல வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமோ, ஆவணமோ இல்லை” என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் தான் பிறந்தார் என அறுதியிட்டுக்கூற எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில், அந்த நாளை அவருடைய பிறந்த நாளாக அறிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது, எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் நீதிபதி தனது உத்தரவில், 1,330 குறள்கள் மூலமாக மனித குலத்தின் வாழ்வியலுக்கு வழிவகை செய்து கொடுத்துள்ள திருவள்ளுவரின் பிறந்த தினத்தை கண்டறிய நீதிமன்றமே ஆராய்ச்சியில் இறங்கியது.

ஆனால், அவரது பிறந்தநாள் குறித்த எந்தவொரு தீர்க்கமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. தை 2-ம் தேதியை திருவள்ளுவர் தினமாக அறிவித்த அரசின் உத்தரவில் எந்தவொரு இடத்திலும் பிறந்தநாள் எனக் குறிப்பிடவில்லை. அதேசமயம் மனுதாரர் சார்ந்துள்ள அமைப்பு வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்று திருவள்ளுவரின் பிறந்த நாளை தங்களது விருப்பம்போல கொண்டாட எந்தவொரு தடையும் இல்லை, என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x