Published : 18 Sep 2024 06:21 PM
Last Updated : 18 Sep 2024 06:21 PM

“விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டை பாஜக வரவேற்கிறது”- கே.பி.ராமலிங்கம்

தருமபுரி: "விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு தேவையான நேரத்தில் நடத்தப்படுகிறது. அதை நடத்துகிறவரின் நோக்கத்தை அந்த மாநாட்டின் முடிவில்தான் அறிய முடியும். என்றபோதும் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டை பாஜக வரவேற்கிறது" என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா, மணி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா நினைவு ஆலய வளாகத்தில் வழிபட கடந்த 2022ம் ஆண்டு பாஜக நிர்வாகிகள் முயன்றனர். அப்போது காவல்துறையின் தடையை மீறி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் மீது பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு பென்னாகரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு இவ்வழக்கு தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட சார்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் இன்று தருமபுரி மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

முன்னதாக, கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியது: "விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு தேவையான நேரத்தில் நடத்தப்படுகிறது. அதை நடத்துகிறவரின் நோக்கத்தை அந்த மாநாட்டின் நிறைவில் தான் அறிய முடியும். இதை பாஜக வரவேற்கிறது. இந்த மாநாட்டுக்கு திமுக நிர்வாகிகள் செல்வார்கள் என தகவல் வந்துள்ளது. விசிக-வினர் இந்த மாநாட்டுக்கு திமுக-வை அழைத்தார்களா அல்லது அழைக்காமலே திமுக செல்கிறதா எனத் தெரியவில்லை. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள திமுகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. இவர்கள் தான் சாராய ஆலையையே நடத்துகிறார்கள். எனவே, விசிக தலைவர் திருமாவளவன் தனக்கு இருக்கும் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் மது ஒழிப்பு மாநாட்டுக்கு திமுக-வை அழைத்திருக்கக் கூடாது.

சுதந்திரப் போராட்ட வரலாறை எழுத பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிய குழுவை அமைத்திருக்கிறது. சுதந்திரத்துக்கு பின்பு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியினர், அவர்கள் பங்குபெற்ற சுதந்திர போராட்ட வரலாற்றை மட்டுமே பதிவு செய்து வைத்திருக்கின்றனர். பாலகங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, தீரன் சின்னமலை, சுப்பிரமணிய சிவா போன்றவர்கள் பங்களித்த சுதந்திர போராட்டங்களெல்லாம் சுதந்திர போராட்ட வரலாற்றில் இடம்பெறாமல் மறைக்கப் பட்டுள்ளது. பாடத் திட்டங்களில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் சரி செய்வதற்காகத் தான் இந்தக் குழு பணியாற்றி வருகிறது. திமுக-வின் வீரியத்தை ஏற்கெனவே பலமுறை பார்த்துவிட்டோம். இப்போதும் அவர்களின் வீரியத்தை இந்திய பேரரசை ஆள்பவர்கள் பார்க்கத்தான் போகிறார்கள்" என்று கே.பி.ராமலிங்கம் கூறினார். பேட்டியின்போது, மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x