Published : 18 Sep 2024 10:34 AM
Last Updated : 18 Sep 2024 10:34 AM
கூடலூர்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவியுள்ளதால் நீலகிரி எல்லையில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு நிபா வைரஸ் தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கேரளா அரசு காட்டு முண்டா என்ற இடத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து யாரும் வெளியே செல்லாதவாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது அதே போல் பொதுமக்கள் யாரும் முகக்கவசம் இல்லாமல் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது
மலப்புரம் மாவட்டம் நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ளதால் எல்லைகளில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தாளூர், சேரம்பாடி நாடுகாணி, பாட்டவயல். நம்பியார் குன்னு ஆகிய 5 சோதனைச் சாவடிகளில் சுகாதார ஆய்வாளர் உட்பட தலா மூன்று பேர் பேருந்து, கார், வேன் உட்பட வாகனங்களில் வரும் பயணிகளை சோதனை செய்து காய்ச்சல் இருக்கிறதா? என்று பார்க்கின்றனர். அதேபோல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக தனிமைப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக, கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க, எல்லையோர மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அறிகுறிகள்: காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், மனநிலை மாற்றம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. ஆனாலும், பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்தால், அனைத்து விதமான தொற்றுகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT