Published : 18 Sep 2024 04:37 AM
Last Updated : 18 Sep 2024 04:37 AM

தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களை முன்னதாகவே அறிவிக்க கோரிக்கை

சென்னை: தீபாவளி பண்டிகை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்களை முன்னதாகவே அறிவிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக். 31-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடபடுகிறது. ரயில் டிக்கெட்டைப் பொருத்தவரை 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு ஜூலை 1, 2-ம் தேதிகளில் நடைபெற்றது. தென் மாவட்டங்களுக்கு புறப்படும் நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன், பொதிகை, முத்துநகர் உள்ளிட்ட முக்கிய ரயில்களில் சில நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. குறிப்பாக, பாண்டியன், நெல்லை, பொதிகை ஆகிய ரயில்களில் காத்திருப்போர் பட்டியலும் முடிந்து “ரெக்ரெட்” என்று காட்டியது.

இதேபோல, மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் சேரன், நீலகிரி உள்ளிட்ட ரயில்களிலும், பகலில் இயக்கப்படும் வைகை, பல்லவன் விரைவு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் எண்ணிக்கை நீண்டது. ரயில் டிக்கெட் முன்பதிவை பொருத்தவரை 80 சதவீதத்துக்கும் மேல் இணையதளம் வாயிலாகவும், மீதமுள்ள டிக்கெட் முன்பதிவு கவுன்ட்டர்கள் மூலமாகவும் நடைபெற்றது. குறிப்பாக, முன்பதிவு டிக்கெட் பெற ரயில் நிலையத்தில் உள்ள கவுன்ட்டர்களில் அதிகாலை முதல் நெடுநேரம் காத்திருந்த பயணிகள், டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர். இவர்கள் தற்போது சிறப்பு ரயில்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து தென் மாவட்ட பயணிகள் சிலர் கூறியதாவது: சென்னையில் வசித்து வரும் நாங்கள், தீபாவளி, பொங்கல் பண்டிகை காலத்தில் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். எனவே, தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்ல வசதியாக டிக்கெட் முன்பதிவு செய்ய ரயில் நிலையத்தில் உள்ள கவுன்ட்டர்களில் முயற்சி செய்தோம். ஆனால், சில நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்துவிட்டது. இதனால், டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளோம். எனவே, சிறப்பு ரயில்களை எப்போது அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்து உள்ளோம். கடந்த சில ஆண்டுகளாகவே பண்டிகை சிறப்பு ரயில்களை கடைசி கட்டத்தில் அறிவிக்கின்றனர். இதனால் பயணத்தை திட்டமிடமுடியாத நிலை இருக்கிறது. எனவே, இந்த ஆண்டு சிறப்பு ரயில்களை முன்னதாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் முன்பதிவு டிக்கெட் செய்ய வசதியாக இருக்கும் இவ்வாறு அவர்கள் கூறினர்.

விரைவில் முடிவு: தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, “தீபாவளிக்கு சிறப்பு ரயில்களை இயக்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும். எந்தெந்த வழித் தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்பது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும். காத்திருப்பு பட்டியல் அதிகமாக உள்ள வழித் தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்குவது, வாய்ப்புள்ள விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளோம்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x