Published : 18 Sep 2024 03:30 AM
Last Updated : 18 Sep 2024 03:30 AM

பேரிடர் காலங்களில் மத்திய, மாநில பேரிடர் முகமைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து இன்றும், நாளையும் ஆலோசனை

சென்னை: பேரிடர் காலங்களில் மத்திய, மாநில பேரிடர் முகமைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மற்றும் பயிற்சி சென்னையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

இதுகுறித்து, தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் உறுப்பினர் லெப்டினென்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாறி வரும் பருவநிலை மாற்றம்காரணமாக, புயல், நிலச்சரிவு, மேக வெடிப்பு, அதன்மூலம் அதிகனமழை பெய்வது உள்ளிட்ட பேரிடர்கள் நிகழ்கின்றன. குறிப்பாக, வங்காள விரிகுடா கடல் பகுதியில் அதிகளவு புயல்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு ஏற்படும் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதற்காக மத்திய, மாநில அரசுகளின் பேரிடர்முகமைகள் உள்ளன. ஆனால்,இந்த முகமைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் பயிற்சி சென்னையில் உள்ள தக் ஷிண பாரத ராணுவ மையத்தில் செப்.18, 19-ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) நடைபெறுகிறது.

இதில் மத்திய, மாநில பேரிடர் மேலாண்மை முகமைகள், ராணுவம், விமானப் படை, கடற்படை,கடலோர காவல் படை, மத்தியரிசர்வ் காவல் படை, வானிலை ஆய்வு மையம், மத்திய நீர் ஆணையம் உள்ளிட்ட 35 முகமைகள் பங்கேற்கின்றன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அண்மையில், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பெய்த கனமழை ஆகியவற்றால் பெரிய அளவில் பேரிடர் ஏற்பட்டது.

இத்தகைய பேரிடர் ஏற்படும்போது எவ்வாறு ஒருங்கிணைந்துசெயல்படுவது, தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். மேலும், பேரிடர்ஏற்படும் இடங்களில் டிரோன்களை பயன்படுத்தி மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்று வழங்குவது, மீட்பு பணியில் ரோபோக்களை பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படும்.

தேசிய பேரிடர் மேலாண்மை முகமை ‘சச்சிட்’ என்ற செயலியை உருவாக்கி உள்ளது. பொதுமக்கள் இந்த செயலியை தங்களது செல்போனில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிமூலம் பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்கள் உள்ளூர் மொழியில் வழங்கப்படுகிறது. இதன்மூலம், பொதுமக்கள் இயற்கை சீற்றங்கள் குறித்து முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பாக இருக்க முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x