Published : 18 Sep 2024 05:52 AM
Last Updated : 18 Sep 2024 05:52 AM

தமிழகம் முழுவதும் மிலாடி நபி பண்டிகை கோலாகலம்

கோப்புப் படம்

சென்னை: தமிழகம் முழுவதும் மிலாடி நபி பண்டிகை நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. முஸ்லிம் மக்கள் தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்புகள், பிரியாணி வழங்கி கொண்டாடினர்.

நபிகள் நாயகம் பிறந்தநாளான மிலாடி நபி பண்டிகை தமிழகம் முழுவதும் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகள், பிரியாணி வழங்கி மகிழ்ந்தனர்.

சென்னை முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை தமிழக சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சந்தித்தார். அவருக்கு முதல்வர், மிலாடி நபி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சென்னை திருவல்லிக்கேணி யில் தமிழக தர்காக்கள் ஒருங்கிணைப்பு பேரவை சார்பில் மிலாடி நபி ஊர்வலம் நடைபெற்றது. காயிதே மில்லத் நெடுஞ்சாலையில் இருந்து ஆதாம் மார்க்கெட் வழியாக சிஎன்கே சாலை வரை நடைபெற்ற ஊர்வலத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், எம்எல்ஏ ஹசன் மவுலானா, ஒருங்கிணைப்பு பேரவையின் துணைத் தலைவர் சையத் யாகூப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நபிகள் நாயகத்தின் பல்வேறு போதனைகளை பதாகைகளில் ஏந்தி ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் சார்பில் மிலாடி நபி பேரணி மாநாடு நடைபெற்றது.

வேலூர், கோவை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிலாடி நபி பண்டிகையை முஸ்லிம்கள் உற்சாகத்துடன் கொண் டாடினர்.

தலைவர்கள் வாழ்த்து: அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் மிலாடி நபி வாழ்த்துகள். அனைவர் வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி நிலவவும், அன்பு,நிம்மதி நிலைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

விசிக தலைவர் திருமாவளவன்: முஸ்லிம் மக்கள் யாவருக்கும் எனது இனிய மிலாடி நபிவாழ்த்துகள். நபிகள் நாயகத்தின் நற்பண்புகள், அவரது போதனை களை நினைவுகூர்ந்து, சமூக நல்லிணக்கத்தை வளர்த்து, சமூக அமைதியை நிலைநாட்ட இந்த நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு மிலாடி நபியை முன் னிட்டு நேற்று பொது விடுமுறை விடப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x