Published : 17 Sep 2024 06:38 PM
Last Updated : 17 Sep 2024 06:38 PM
மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் 16 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகளை இயங்கி வருகின்றன. இதில் மஞ்சூரில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் 2,000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் இருப்பதால் எப்போதும் இந்த தேயிலை தொழிற்சாலை பரபரப்பாக இயங்கி வரும்.
சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்கள் தோட்டங்களில் பறிக்கும் தேயிலைகளை இங்கு விற்பனை செய்து வருகின்றனர். அந்த பசுந்தேயிலை மூலம் இங்கு தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்பட்டு குன்னூர் இன்கோசர்வ் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு 9 மணி முதல் 1 மணி வரை இங்கு தேயிலை உற்பத்தியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இரவு 1 மணிக்கு தங்களது பணியை முடித்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் இந்த தேயிலை தொழிற்சாலையின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. லேசாக பற்றிய நெருப்பானது அங்கிருந்த தேயிலை கழிவுகளில் பிடித்து மளமளவென பரவியது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த காவலாளி அபாய அலாரத்தை இயக்கிவிட்டு உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்துள்ளார். உடனடியாக தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து குன்னூரில் இருந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் தேயிலை தூள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக நேற்று தேயிலை கொள்முதல் குறைவாக இருந்ததால் இரவு 1 மணிக்கு பின்னர் தொழிற்சாலை இயங்கவில்லை. இதனால் பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இல்லாவிடில் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என்கிறார்கள்.
இது குறித்து பேசிய தேயிலை தொழிற்சாலை நிர்வாகத்தினர், ''தேயிலைத்தூள் தயாரிக்கும் அடுப்புப் பகுதியில் நெருப்பு பொறிபட்டு அதன் மூலம் மின் சாதனங்களில் தீ பற்றியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பற்றிய நேரத்தில் பணிகள் நடைபெறாததால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எந்திரங்களும் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT