Published : 17 Sep 2024 12:54 PM
Last Updated : 17 Sep 2024 12:54 PM
விழுப்புரம்: திமுக முப்பெரும் விழாவில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கக் கோரி வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 1987 செப்.17-ம் தேதி மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். இதையொட்டி ஆண்டுதோறும் செப்.17-ம் தேதியை இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளின் நினைவு தினமாக பாமகவினர் கடைபிடித்து வருகின்றனர்.
அதன்படி திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் நிகழ்வில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளின் உருவப்படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்த் தூவி அஞ்சலி செலுத்துவர்.
இதனை தொடர்ந்து அவர்கள் சித்தனி, பாப்பனப்பட்டு, முண்டியம்பாக்கம், பனையபுரம், கோலியனூர் மற்றும் கடலூர் மாவட்டம் கொள்ளுக்காரன்குட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் நினைவுத் தூண்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில் திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகம் சிதிலமடைந்துள்ளதால் இன்று தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கில், இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் உருவப்படத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத்தலைவர் கோ.க.மணி, சிவகுமார் எம்எல்ஏ, வழக்கறிஞர் பாலு, பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்று தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி அவரின் உருவச் சிலைக்கு ராமதாஸ் மரியாதை செலுத்தினார். பெரியாரின் கனவை நனவாக்க உறுதியேற்றுள்ளோம். அவரின் கொள்கையை முழுமையாக ஏற்ற கட்சி பாமக. அவரின் வழியில் வந்த கட்சிகள் கொள்கைகளை மட்டும் பேசிக்கொண்டுள்ளனர்.
பெரியார் சமூகநீதிக்கான இந்திய அளவிலான அடையாளச் சின்னம். சமூகநீதிக்கான அநீதிகளை ஆளும் திமுக செய்து வருகிறது. தமிழகத்தில் சாதியை வைத்தே அடக்குமுறைகள் ஏற்பட்டன. இதைத் தெரிந்துகொள்ளக் கூட முதல்வருக்கு ஆர்வமில்லை. சாதிவாரி கணக்கெடுப்புக்காக 45 ஆண்டுகளாக பாமக போராடிவருகிறது.
பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு நடத்த ஊராட்சி மன்றத் தலைவருக்குக்கூட அதிகாரம் உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இது தொடர்பாக கணக்குக் கேட்டால் அரசிடம் தரவுகள் இல்லை. 1987-ம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு பின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடை பெற்றோம். கலைஞர் இருந்திருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்திருப்பார். தியாகிகள் தினமான இன்று நாங்கள் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள் என்று முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம்.
அரசில் உள்ள 53 துறைகளில் ஒரு செயலாளர்கூட வன்னியர் கிடையாது. எதிலும் பிரதிநிதித்துவம் இல்லை. 23 வன்னியர் எம்எல்ஏ-க்கள், 21 பட்டியல் சமூக எம்எல்ஏ-க்கள் இருந்தாலும் இரு சமூகத்திலும் தலா 3 அமைச்சர்கள் தான் உள்ளனர். மற்ற சமூக எம்எல்ஏ-க்களில் ஒவ்வொரு சமூகத்திலும் எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். இன்று பெரியார் பிறந்தநாளில் முப்பெரும் விழா நடத்துகிறது திமுக. இந்த நாளில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் அறிவிக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT