Published : 17 Sep 2024 05:01 AM
Last Updated : 17 Sep 2024 05:01 AM
சென்னை: பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள், அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனர்.
‘‘பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும். அன்று சமூக நீதி உறுதிமொழி ஏற்கப்படும்’’ என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டுஅறிவித்தார். அதன்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ம் தேதி சமூக நீதி நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், பெரியார் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு இன்று அரசு விடுமுறை என்பதால், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் தலைமைச்செயலகம் பின்புறம் உள்ள ராணுவமைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்துக்கு முதல்வர் ஸ்டாலின், மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, முதல்வர் தலைமையில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறையாக கடைபிடிப்பேன். சுயமரியாதை ஆளுமை திறனும், பகுத்தறிவு பார்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும்.
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும், மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்க இந்த நாளில் உறுதி ஏற்கிறேன்’’ என்ற உறுதிமொழியை முதல்வர் ஸ்டாலின் வாசிக்க, அனைவரும் உறுதி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் முருகானந்தம், பல்வேறு துறைகளின் செயலர்கள், தலைமைச்செயலக அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT