Published : 18 Jun 2018 09:26 AM
Last Updated : 18 Jun 2018 09:26 AM
தமிழகத்தில் இனி புதிய சாலை, மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்க பாதுகாப்பு தணிக்கை முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் 2020-க்குள் 50 சதவீத சாலை விபத்துகளைக் குறைக்க முடியும் என தமிழக நெடுஞ்சாலைத் துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் பட்டிய லில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஆண்டுதோறும் சுமார் 15,500 பேர் இறக்கின்றனர். விபத்துகளைக் குறைக்க மற்ற மாநிலங்களில் அமைத்திருப்பது போல், சாலை பாதுகாப்பு தணிக்கை முறையைக் கொண்டுவந்து முழு அளவில் செயல் படுத்த வேண்டுமென நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைப் பொறியாளர்கள் சிலர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தமிழகத்தில் சாலை விபத்து கள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்க, சாலைகள் விரிவாக்கம், மேம்பாலங்கள் கட்டுதல், வேகத்தடை அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடக்கின்றன. ஆனால், இதுபோன்ற பணிகளால் மட்டுமே சாலை விபத்துகளின் எண்ணிக்கை, உயிரிழப்புகளைக் குறைக்க முடியாது.
ஆய்வு மேற்கொள்ளுதல்
தற்போது புதிய சாலைகள் அமைக்க வேண்டுமென்றால், எவ்வளவு தூரம் நிலம் தேவை, எவ்வளவு செலவு, எந்த ஊர் களுக்குச் செல்லும் என்பது போன்ற விபரங்கள் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. ஆனால், விபத்துகளைக் குறைப்பது குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்வதில்லை.
எனவே, சாலை விபத்துகளைக் குறைக்க, அதிநவீன அறிவியல் சார்ந்த புதிய தொழில்நுட்ப முறைகளை நாம் நடை முறைப்படுத்த வேண்டும். அதில் முக்கியமானது சாலை பாதுகாப்பு தணிக்கை முறையாகும்.
இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், ஒரு சாலை அமைப் பதற்கு முன்பே, சாலை அமைய உள்ள இடங்களில் நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு நடத்துவார்கள். அதில், பல்வேறு கட்ட ஆய்வு நடத்த வேண்டும்.
அப்போது, எங்கெல்லாம் போக்குவரத்து நெரிசல் அதிகம், சாலை வளைவுகள் இருப்பது, சாலை விபத்துகளைக் குறைக்கும் வகையில் சாலைகளை வடிவமைத்தல் உள்ளிட்ட விபரங்களைத் திரட்டி, பிறகு புதிய சாலைகளை அமைத்தால், விபத்துகளை படிப்படியாகக் குறைக்க முடியும். இந்த புதிய முறையை கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் செயல்படுத்தத் தொடங்கிவிட்டன.
தமிழகத்திலும் சாலை பாதுகாப்பு தணிக்கையை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.
பல்வேறு திட்டங்கள்
இதுதொடர்பாக தமிழக நெடுஞ்சாலைத் துறை தலைமை அதிகாரிகள் கூறியதாவது:
சாலை விபத்துகளைக் குறைக் கும் வகையில் போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை உள்ளிட்ட துறை களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். வரும் 2020-க்குள் 50 சதவீத சாலை விபத்துகளைக் குறைக்க பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.
தமிழகத்தில் சாலை பாதுகாப்பு தணிக்கை முறையை முழு வீச்சில் செயல்படுத்த உள்ளோம். இதற்காக, குழுவை அமைக்க தமிழக அரசிடம் தெரிவித்துள்ளோம். அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்தக் குழு செயல்படும். ஒரு இடத்தில் புதியதாக சாலை, மேம்பாலம், சுரங்கப்பாதை கட்டுவதற்கு முன்பும், பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பும், அதன் பிறகும் ஆய்வு செய்யும் வகை யில் சாலை பாதுகாப்பு தணிக்கை குழு செயல்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT