Published : 17 Sep 2024 06:10 AM
Last Updated : 17 Sep 2024 06:10 AM
கடலூர்: தமிழகத்தில் இருந்து உத்தராகண்ட் மாநிலத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்று, நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட சிதம்பரம் பகுதியை சேர்ந்த 30 பேரில் 10 பேர் இன்று ஊர் திரும்புகின்றனர். மற்ற 20 பேர் நாளை வருவார்கள் என தெரிகிறது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து 18 ஆண்கள், 12 பெண்கள் என 30 பேர் உத்தராகண்ட்மாநிலம், ஆதிகைலாஷ் கோயிலுக்கு கடந்த 1-ம் தேதி ஆன்மிக சுற்றுலா சென்றனர். பல்வேறு ஆன்மிக தலங்களை பார்த்த பிறகு அவர்கள் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது ஆதிகைலாஷில் இருந்து 18 கி.மீ. தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதையடுத்து அங்குள்ள ஒரு ஆசிரம பகுதியில் 30 பேரும்பாதுகாப்பாக தங்கினர். நிலச்சரிவால் சாலை அடைபட்டதால், கடந்த 6 நாட்களாக அங்கிருந்து அவர்கள் வெளியேற முடியாமல் சிக்கி தவித்து வந்தனர். இதற்கிடையே, இந்த குழுவில் இருந்த ரவிசங்கர், சிதம்பரத்தில் உள்ள தனது மகன் ராஜனை கடந்த 14-ம் தேதி கைப்பேசியில் தொடர்புகொண்டு, தாங்கள் சிக்கி தவிப்பது குறித்து தெரிவித்தார்.
ஆனால், அதன் பிறகு அவர்களை கைப்பேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. தகவலறிந்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடனடியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் தெரிவித்து, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர், உத்தராகண்ட் மாநில அதிகாரிகளை தொடர்புகொண்டு ராணுவம் மூலம் 30 பேரையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் முதல் கட்டமாக 15 பேரும், 2-ம் கட்டமாக 15 பேரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு தார்சூலாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
முதல்வர் முக.ஸ்டாலின், கைப்பேசியில் தொடர்பு கொண்டு அவர்களிடம் நலம் விசாரித்தார். இந்நிலையில் அவர்களை டெல்லிக்கு வேனில் அழைத்து வருகின்றனர். அங்கிருந்து 30 பேரையும் சிதம்பரம் அழைத்து வருவதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அவர்களில்10 பேர் இன்றும் மீதமுள்ள 20 பேர் நாளையும் சிதம்பரம் வந்து சேர்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT