Published : 17 Sep 2024 06:13 AM
Last Updated : 17 Sep 2024 06:13 AM

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ.434 கோடியில் சர்வதேச சரக்கு பெட்டக முனையம் அர்ப்பணிப்பு

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ. 434 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து, அங்கிருந்து புறப்பட்ட முதல் கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தார். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ.434 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் 9-வது சரக்கு தளம், ஜே.எம்.பக்சி நிறுவனத்தின் மூலம் ரூ.434.17 கோடி மதிப்பீட்டில், அதிநவீன வசதிகளுடன் சர்வதேச சரக்குபெட்டக முனையமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் துறைமுகத்தில் ரூ.485.67 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவை, வஉசி துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது.

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறைஅமைச்சர் சர்பானந்தா சோனோவால் பங்கேற்று, சர்வதேச முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து, இங்கிருந்து புறப்பட்ட முதலாவது சரக்கு பெட்டக கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தார். ரியோ கிராண்டி எக்ஸ்பிரஸ் என்ற இந்த சரக்கு பெட்டக கப்பல்தூத்துக்குடியில் இருந்து ஐரோப்பா செல்கிறது.

இந்த விழாவில் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு வளர்ச்சி பாதையில்வேகமாக சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக கடல்சார் துறைமிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. அதன் ஒரு எடுத்துக்காட்டு தான் இன்றைய நிகழ்வு. இந்த சர்வதேச சரக்கு பெட்டக முனையம் மூலம் ஆண்டுக்கு 6 லட்சம் சரக்கு பெட்டகங்களையும், 14.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட கப்பல்களையும் கையாள முடியும்.இந்த முனையம் அடுத்த ஆண்டுபிப்ரவரி மாதம்தான் பயன்பாட்டுக்கு வரவேண்டும். ஆனால், முன்கூட்டியே பணிகள் முடிக்கப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இது உதவியாக இருக்கும். வரும் 2047-ம் ஆண்டில், 5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கிநாட்டை இட்டு செல்லும் பிரதமர் மோடியின் திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த வளர்ச்சி. இந்த சரக்கு பெட்டக முனையம்மூலம் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு செலவு பெருமளவில் மிச்சமாவதுடன், கால விரயமும் தடுக்கப்படும். விரைவில் தூத்துக்குடி வஉசி துறைமுகம் சர்வதேச சரக்கு பெட்டக பரிமாற்ற மையமாக மாறும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

காணொலியில் பிரதமர் வாழ்த்து: விழாவில் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச சரக்கு பெட்டக முனையம் மூலம், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ. 7,000 கோடியில் வெளித்துறைமுக விரிவாக்கப் பணிகளை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தேன். தொடர்ந்து பல பணிகள் இங்கே நடைபெறுகின்றன. இந்தபணிகள் அனைத்தும் நிறைவுறும்போது தூத்துக்குடி துறைமுகம் மிகப்பெரிய துறைமுகமாக வளர்ச்சியடையும் என்றார் அவர். மத்திய இணையமைச்சர் சாந்தனு தாக்கூர், கனிமொழி எம்.பி., மத்திய கப்பல் துறை செயலர் டி.கே.ராமச்சந்திரன், துறைமுக ஆணையத் தலைவர் சுசந்த குமார் புரோகித், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x