Last Updated : 16 Jun, 2018 11:41 AM

 

Published : 16 Jun 2018 11:41 AM
Last Updated : 16 Jun 2018 11:41 AM

விழுப்புரம் மாவட்ட விளைநிலங்களில் விவசாயிகளை அச்சுறுத்தும் விபரீத மின்கம்பங்கள்

கிராமப்புறங்களில் விளைநிலப் பகுதிகளில் செல்லும் மின்பாதைகளைத் தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் மிகுந்த சேதமடைந்து, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் இருப்பதால், உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் நிலவுவதாக விவசாயிகளும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனாசூர்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி செல்லும் மின் பாதையில், ஏ.குமாரமங்கலம் ஐயனார் கோயில் எதிரே உள்ள விளைநிலத்தில் மின்கம்பங்கள் நடப்பட்டு, மின்கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் அருகேவுள்ள மின் மாற்றியிலிருந்து வெளியேறும் மின்கம்பிகளை தாங்கிக் கொண்டிருக்கும் மின்கம்பங்களில் இருந்து, அருகிலுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்கான மின் மோட்டாருக்கும் மின் இணைப்பு சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மின்கம்பிகளைத் தாங்கிக் கொண்டிருக்கும் மின்கம்பங்களில், சிமெண்ட் பூச்சு முழுவதும் உடைந்து, உள்ளிருக்கும் கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எப்போது உடைந்து விழுமோ என்ற அச்சம் நிலவுவதாக எலவனாசூர் கோட்டையைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் கவலை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ''தற்போது மழைக்காலம் தொடங்கவுள்ளது. விவசாயிகள் குறுவை சாகுபாடியைத் தொடங்க ஆயத்தமாகி வரும் நிலையில், விளைநிலங்களில் விவசாயப் பணிகளில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மீது, சேதமடைந்த மின்கம்பங்கள் வழியாக மின்கசிவு ஏற்பட்டு, உயிர்ச் சேதம் நடைபெறக்கூடிய அபாயம் உள்ளது.

இது மட்டுமல்ல எலவனாசூர்கோட்டை-தியாகதுருகம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள செம்பியன்மாதேவியிலிருந்து அலங்கிரி-பின்னல்வாடி செல்லும் சாலையில் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள மும்முனை மின்சாரத்தை தாங்கி நிற்கும் மின்கம்பத்தின் நுனிப் பகுதியில் போடப்பட்டுள்ள இரும்பு கப்பி அபாயகரமான நிலையில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் அது கீழே விழும் நிலையில் காணப்படுகிறது. இது தொடர்பாக மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் புகார் செய்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை'' என்றார்.

கடந்த சில நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை, தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை பகுதியில் மாலை நேரங்களில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அண்மையில் கள்ளக்குறிச்சியில் விவசாய நிலம் அருகே வேலைசெய்து கொண்டிருந்த அய்யாவு என்பவர் இடிதாக்கி உயிரிழந்தார். மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் விவசாயிகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மின் கம்பங்கள் அகற்றப்பட்டு தரமான மின்கம்பங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதெ விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இது தொடர்பாக விழுப்புரம் மண்டல மின்வாரிய கூடுதல் பொறியாளர் மனோகரனிடம் கேட்டபோது, ''குறிப்பிடப்படும் இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்திருப்பது தொடர்பாக புகார்கள் எதுவும் வரவில்லை. இருப்பினும் அவ்விடத்தை ஆய்வுசெய்த பின் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x