Published : 16 Sep 2024 08:39 PM
Last Updated : 16 Sep 2024 08:39 PM
செங்கல்பட்டு: சுங்கச் சாவடி கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்கல்பட்டில் பரனூர் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கு இடையே நடந்த தள்ளுமுள்ளு போராட்டத்தில், சுங்கச் சாவடி பூத்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச் சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 25 சுங்க சாவடியிலும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. வாகனத்தின் வகையை பொறுத்து ரூ.5 முதல் ரூ.120 வரையில் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இன்று (செப்.16) சுங்கக் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
அந்த வகையில் செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள சுங்கச் சாவடியிலும் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த சுங்கக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெறும் என் முன்னதாக அறிவிக்கப்ட்டது. அதன்படி, செங்கல்பட்டில் பரனூர் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு மமக கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென மனிதநேய மக்கள் கட்சியினர் சிலர் சுங்க சாவடி வழியாக செல்லும் வாகனங்களை திடீரென மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கிருந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை தடுக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில் மக்கள் நேய மனித கட்சி நிர்வாகிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சுங்க சாவடி 4,5,6 பூத்களின் கண்ணாடிகளை கட்சி நிர்வாகிகள் அடித்து உடைத்தனர்.
இதனால் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட சில நபர்களை கைது செய்தனர். அப்போது கட்சி நிர்வாகிகள் போலீஸ் வாகனத்தை மறித்து கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி போலீஸாரின் வாகனத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். இதனால், இந்த பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து, கைது செய்தவர்களை போலீஸார் விடுவித்தனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக சுங்கச் சாவடியின் இரு பக்கத்திலும் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுங்க சாவடி வழியே சென்ற வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...