Published : 16 Sep 2024 05:05 PM
Last Updated : 16 Sep 2024 05:05 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாயமான பெண் தொழிலாளரை கண்டுபிடிக்காத காவல் துறையை கண்டித்து உறவினர்கள் மற்றும் கிராம மக்களின் சாலை மறியலால் திருவண்ணாமலை - செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (செப்.16) 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் கிராமத்தில் வசிப்பவர் கோவிந்தன். இவரது மனைவி காமாட்சி (44). இவர், இறையூரில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து, பின்னர் இங்கிருந்து கட்டுமான பணிக்கு பிற இடங்களுக்கு சென்று வீடு திரும்புவது வழக்கம். கட்டுமான பணிக்காக திருவண்ணமலைக்கு கடந்த 8-ம் தேதி சென்ற காமாட்சி மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, காமாட்சியை கண்டுபிடித்து தரக் கோரி பாய்ச்சல் காவல் நிலையத்தில் கடந்த 9-ம் தேதி புகார் அளித்துள்ளனர். ஆனால், அதற்கும் பலனில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் காணாமல் போன காமாட்சியின் நிலை குறித்து, இதுநாள் வரை எந்தத் தகவலும் தெரியவில்லை.
இந்நிலையில், காமாட்சியை கண்டுபிடிக்காத காவல் துறையை கண்டித்து திருவண்ணாமலை - செங்கம் சாலையில் இறையூர் கிராமம் பேருந்து நிறுத்தம் முன்பு உறவினர் மற்றும் கிராமமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “காமாட்சி காணாமல் போனது குறித்து பாய்ச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அவரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாமல் காவல் துறையினர் அலட்சியமாக உள்ளனர். அவர் உயிருடன் உள்ளாரா என்றும் தெரியவில்லை. காமாட்சியை விரைவாக கண்டிபிடித்து தருவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுபற்றி தகவலறிந்து மறியல் நடைபெற்ற இடத்துக்குச் சென்ற பாய்ச்சல் காவல் துறையினர், காமாட்சியை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் கண்டுபிடிக்கப்படுவார் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து, காலை 9 மணி முதல் 11 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. மறியல் போராட்டத்தால் திருவண்ணாமலை - செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை காவல்துறையினர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சீரமைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT