Published : 16 Sep 2024 04:54 PM
Last Updated : 16 Sep 2024 04:54 PM

அரசு அனுமதி பெற்ற மகளிர் விடுதிகள் பட்டியல் வெளியிடப்படுமா? - மதுரை மக்கள் எதிர்பார்ப்பு

மதுரையில் மகளிர் விடுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்து | கோப்புப் படம்

மதுரை: மதுரையில் ஏற்பட்ட மகளிர் விடுதி தீவிபத்தைத் தொடர்ந்து குற்றச் செயல்கள், இதுபோன்ற அனுமதியில்லாமல் நடத்தப்படும் விடுதிகளை எளிதல் கண்டறிய மதுரையில் அனுமதியில்லாமல் செயல்படும் மகளிர் விடுதிகளைக் கண்டறியவும் அனுமதி பெற்ற மற்றும் அனுமதி பெறாத விடுதிகள் பட்டியலை வெளியிடுவதற்கு மாவட்ட சமூக நலத் துறை நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடம் எழுந்துள்ளது.

நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்புகளுக்காகவும், படிப்பதற்காகவும் மாணவிகள், பெண்கள் வீடுகளை தவிர்த்துவிட்டு விடுதிகளில் தங்கு கின்றனர். விலைவாசி உயர்வு, அதிகப்படியான வீட்டு வாடகையால் தனி நபராக வீடு வாடகைக்கு எடுக்க முடியாமல் மகளிர் விடுதிகளில் இவர்கள் தங்குகின்றனர். விடுதிகளில் சுகாதாரமற்ற சூழல், தரமற்ற சாப்பாடு, இடநெருக்கடி போன்ற இடர்பாடுகள் இருந்தாலும் குடும்பச் சூழல் கருதி பெண்கள், மாணவிகள் அனைத்தையும் சகித்துக்கொண்டு விடுதிகளில் தங்குகின்றனர். இதனால், மகளிர் விடுதிகளில் நடக்கும் பல விரும்பத் தகாத சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை.

மகளிர் விடுதிகளை சமூக நலத்துறை, மாநகராட்சி, தீயணைப்புத் துறை போன்ற பல்வேறு அரசுத் துறைகளின் தடையில்லாச் சான்றும், அனுமதியும் கிடைத்த பிறகே நடத்த முடியும். ஆனால், இந்தக் கட்டுப்பாடுகள், விதிகள் எதையும் பின்பற்றாமல் மதுரையில் மகளிர் விடுதிகள் புற்றீசல்போல் பெருகியுள்ளன. இப்படியான மகளிர் விடுதியில் தான் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர். இந்த விடுதி சமூக நலத் துறையின் அனுமதி பெறவி்லலை என்பது சமூக நலத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

அது மட்டுமின்றி மாநகராட்சியும், அந்தக் கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து, இடித்து அப்புறப்படுத்துவதற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஆனால், அதையும் மீறி இந்த மகளிர் விடுதி தொடர்ந்து செயல்பட்டுள்ளது. அதனால், இந்த சம்பவத்துக்கு பிறகு மாநகராட்சி இந்தக் கட்டிடத்தை இடித்து அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த ஒரு விடுதி மட்டுமில்லாது மதுரையில் இன்னும் ஏராளமான விடுதிகள் சமூக நலத்துறையின் அனுமதியின்றி செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை நகரில் செயல்படும் அனைத்து மகளிர் விடுதிகளையும் சமூக நலத்துறையின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவும், அங்கு தங்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீ விபத்து சம்பவத்தை அடுத்து, அனுமதி பெற்ற மற்றும் அனுமதி பெறாத விடுதிகள் பட்டியலை வெளியிடுவதற்கு மாவட்ட சமூக நலத்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இது குறித்து சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மதுரை நகரில் 35 மகளிர் விடுதிகள் மட்டுமே சமூக நலத் துறை அனுமதி பெற்று செயல்படுகின்றன. மகளிர் விடுதிகள் நடத்துவதற்கு சமூக நலத்துறை மட்டுமில்லாது தீயணைப்புத் துறை, பொதுப்பணித் துறை போன்ற பல்வேறு அரசுத் துறைகளின் அனுமதி பெற வேண்டும். தீ விபத்து ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்த மகளிர் விடுதி அனுமதியின்றி செயல்பட்டுள்ளது. அனுமதி பெறாத விடுதிகள் அனுமதி பெறுவதற்கு ஆட்சியர் ஒரு வாரம் அவகாசம் வழங்கியுள்ளார். அதன் பிறகு தான் அனுமதி பெறாமல் நடத்தி வருவோர் பற்றிய விவரம் தெரிய வரும்" என்று அதிகாரி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x