Last Updated : 16 Sep, 2024 04:10 PM

 

Published : 16 Sep 2024 04:10 PM
Last Updated : 16 Sep 2024 04:10 PM

புதுவை மின் கட்டண உயர்வு: அதிமுக அழைப்பு விடுத்தும் உண்ணாவிரதத்தில் பங்கேற்காத விசிக

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி: மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி புதுச்சேரியில் அதிமுகவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதில், முதல்வர் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ, சமூக அமைப்புகள் பங்கேற்று வாழ்த்திப் பேசினர். அதேசமயம், அதிமுக அழைப்பு விடுத்தும் இப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்கவில்லை.

புதுவையில் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டதால் கடந்த ஏப்ரல் மாதம் மின் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தலுக்குப் பிறகு கடந்த ஜூன் 16-ம் தேதி முதல் முன்தேதியிட்டு கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மின் கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகிறது.

அதன்படி, புதுவை மாநில அதிமுக சார்பில் இன்று (செப்.16) மின் கட்டண உயர்வை திரும்பப்பெறக் கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்எல்ஏ-வான பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டம் தொடர்பாக மாநிலச்செயலர் அன்பழகன் கூறுகையில், “அடுத்தகட்டமாக ஒருமித்த கருத்துடைய கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து மாநில அளவில் தொடர் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

இந்தப் போராட்டத்தில் முதல்வர் ரங்கசாமி ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ-வான நேரு, தமிழர்களம் தலைவர் அழகர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் செயலாளர் ஜெகநாதன், மனித உரிமைகள் அமைப்பு தலைவர் முருகானந்தம், மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் உட்பட பல்வேறு சமூக அமைப்பினர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். அதேசமயம், விடுதலைச் சிறுத்தைகள் அலுவலகத்துக்குச் சென்று போராட்டத்தில் பங்கேற்க அதிமுக அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், இப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x