Published : 16 Sep 2024 03:33 PM
Last Updated : 16 Sep 2024 03:33 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடுவில் பட்டியலின மக்கள் வழிபட எதிர்ப்பு எழுந்ததால், சீல் வைக்கப்பட்ட எட்டியம்மன் கோயில் ஒரு மாதத்துக்குப் பிறகு இன்று (செப்.16) மீண்டும் திறக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. முன்னிலையில் பட்டியலின மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது எட்டியம்மன் கோயில். இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோயிலிலில் கடந்த 2002-ம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அப்போது, பட்டியலின மக்கள், மாற்று சமூகத்தினர் என இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, 2011-ம் ஆண்டு கோயில் மீண்டும் திறக்கப்பட்டது.இந்நிலையில், 22 ஆண்டுகள் கழித்து, எட்டியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேக விழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்து, திருப்பணிகள் நடைபெற்றது. அந்த திருப்பணிகளுக்கு, பட்டியலின மக்களிடம் வரி வாங்க, மாற்று சமூகத்தினர் மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஏற்கெனவே நடைபெற்ற பிரச்சினையை கருத்தில் கொண்டு வருவாய் துறை சார்பில் கடந்த மாதம் 8-ம் தேதி கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், கும்பாபிஷேக விழாவின் போது, மாற்று சமூகத்தினர் காலை வேளையிலும், பட்டியலின மக்கள் மதிய வேளையிலும் வழிபாடு நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டதால், கும்பாபிஷேக விழாவுக்கு அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 9-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, காலை வேளையில் மாற்று சமூகத்தினர் கோயிலில் வழிபாடு செய்தனர். மதிய வேளையில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயிலை நோக்கிச் சென்றனர்.
அப்போது, அவர்களை, “கோயிலுக்குச் செல்லும் வழி தனியார் பட்டா நிலத்தில் இருப்பதால் நீங்கள் மாற்று வழியில் செல்லுங்கள்” எனக்கூறி மாற்று சமூகத்தினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு பிரிவினருக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, பட்டியலின மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க, வருவாய்த் துறை அதிகாரிகள் எட்டியம்மன் கோயிலைப் பூட்டி சீல் வைத்தனர்.
இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக, கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரு பிரிவினரும் பங்கேற்ற அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்ற்றது. அதில், சுமுக தீர்வு எட்டப்பட்டது. இதையடுத்து, வழுதலம்பேடு எட்டியம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் ஒரு மாதத்துக்குப் பிறகு திங்கள்கிழமை காலை வருவாய்த் துறையினரால் அகற்றப்பட்டு கோயில் கதவுகள் திறக்கப்பட்டது.
தொடர்ந்து, கோயிலுக்கு ஊர்வலமாக வந்த 200-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். பிறகு, எட்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று, தீபாராதனை நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், எஸ்.பி-யான ஸ்ரீனிவாசபெருமாள் முன்னிலையில் பட்டியலின மக்கள் நெகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பிறகு, செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், “இருபிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கோயிலைப் பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில், இரு பிரிவினரையும் அழைத்து சமாதானப்படுத்தி ஊருக்குள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
இதையடுத்து, இரு பிரிவினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து முதற்கட்டமாக தற்போது எட்டியம்மன் கோயிலின் சீல் அகற்றப்பட்டு சுமுக தீர்வு காணப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இரு பிரிவினரிடையே பிரச்சினை ஏற்படாத வகையில் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், வழுதலம்பேடு கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில், கோயிலுக்கு வரும் சாலை, கோயில் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள ரூ.76 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT