Published : 16 Sep 2024 01:43 PM
Last Updated : 16 Sep 2024 01:43 PM

“திமுக - விசிக உறவில் எந்த விரிசலும், நெருடலும் இல்லை” - முதல்வரை சந்தித்த திருமாவளவன் பேட்டி

சென்னை: “திமுக - விசிக இடையில் எந்த விரிசலும், நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதையே நாங்கள் முன்னிறுத்துகிறோம். ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு என்ற எனது பேச்சு பற்றி முதல்வர் எதுவும் கேட்கவில்லை” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். இதற்காக அவர் விசிக நிர்வாகிகளுடன் இன்று (திங்கள்கிழமை) காலை 11.30 மணியளவில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அங்கே அவர் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வரை சந்தித்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலினிடம் கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள 'மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியது: “அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சென்னை திரும்பியிருக்கும் நிலையில், விசிக சார்பில் முதல்வரை சந்தித்து எங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தோம்.

ரூ.9000 கோடி அளவிலான 19 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. முதல்வரின் இந்தப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்காகப் பாராட்டுகளைத் தெரிவித்தோம் அத்துடன், வரும் அக்டோபர் 2-ம் தேதி விசிக சார்பில் நடைபெறும் 'மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' நிமித்தமாக இரண்டு முக்கியமான கோரிக்கைகள் கொண்ட மனுவை முதல்வரிடம் வழங்கியுள்ளோம். அதில் இடம்பெற்றுள்ள முதலாவது கோரிக்கை, தமிழ்நாட்டில் அரசு மதுபானக் கடைகளின் விற்பனை இலக்கை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பதாகும். இரண்டாவது கோரிக்கை தேசிய அளவிலானது. அரசமைப்புச் சட்டம் உறுப்பு எண் 47-ன் படி படிப்படியாக மதுவிலக்கை இந்திய அளவில் கொண்டு வருவதற்கு அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும் என்பதாகும்.

முதல்வர் எங்களின் கோரிக்கை மனுவை படித்துப் பார்த்தார். பின்னர் அவர், “திமுகவின் கொள்கைதான் மதுவிலக்குக் கொள்கை. மதுவிலக்கு தமிழ்நாட்டி அமலுக்கு வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நிர்வாகச் சிக்கலைக் கருத்தில் கொண்டு அதைப் படிப்படியாக எவ்வாறு நிறைவேற்ற முடியுமோ அவ்வாறு செய்வோம். தேசிய அளவில் மதுவிலக்கு என்ற உங்கள் கோரிக்கையை உங்களோடு சேர்ந்து நாங்களும் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல, அழுத்தம் கொடுக்க விரும்புகிறோம். எனவே அக்.2 மாநாட்டில் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செலாளர் டிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்பர்” என்ற உறுதியை வழங்கியிருக்கிறார்.

இந்த நிலையில் மதுவிலக்கு கருத்தில் உடன்படுவோர் எங்கள் மாநாட்டில் பங்கேற்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும், தடையும், தயக்கமும் இல்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த திருமாவளவன் கூறியதாவது: ‘ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்க’ என நான் பேசியது பற்றி முதல்வர் எதுவும் பேசவில்லை. ஏனெனில், அது 1999-ல் இருந்து நான் பேசி வரும் கருத்து. அது இப்போது சமூக ஊடகங்களில் பெரிதாகப் பேசப்படுகிறது. அந்தக் கருத்தை நாங்கள் இப்போதும், எப்போதும் பேசுவோம். எப்போது வலுவாகப் பேச வேண்டுமோ அப்போது அதை வலுவாகப் பேசுவோம்.

தேர்தலுக்கும் இப்போதைய மாநாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆயிரக்கணக்கான கைம்பெண்களின் கோரிக்கையை முன்னிறுத்தியே இந்த மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம். இதை திசைதிருப்பும் வகையில் தேர்தல் அரசியலோடு பிணைத்துப் பார்க்க வேண்டாம். மாநாட்டில் பங்கேற்கும்படி முதல்வரிடம் நேரடியாக அழைப்பு கொடுக்கவில்லை. அந்த கோரிக்கை மனுவில் இடம்பெற்றிருந்த தகவலின்படி, ‘உங்கள் கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்றுதான். அதனால் இருவர் எங்கள் தரப்பில் இருந்து பங்கேற்பார்கள்’ என்று முதல்வர் உறுதியளித்துள்ளார். மற்றபடி திமுக - விசிக இடையில் எந்த விரிசலும், நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதை நாங்கள் முன்னிறுத்துகிறோம்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x