Published : 16 Sep 2024 12:48 PM
Last Updated : 16 Sep 2024 12:48 PM
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். இதற்காக அவர் விசிக நிர்வாகிகளுடன் இன்று (திங்கள்கிழமை) காலை 11.30 மணியளவில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அங்கே அவர் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வரை சந்தித்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலினிடம் கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள 'மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' தொடர்பாக கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார்.
முன்னதாக, இந்த மாநாட்டில் அதிமுக கூட பங்கேற்கலாம் என திருமாவளவன் அழைப்பு விடுத்தது அரசியல் களத்தில் சர்ச்சையானது. தொடர்ந்து அண்மையில், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், திருமாவளவன் பேசிய வீடியோ, அவரது எக்ஸ் வலைதளத்தில் பகிரப்பட்டதும் விவாதப் பொருளானது. அதில் அவர், “தமிழகத்தில் இதற்கு முன் யாரும் கூட்டணி ஆட்சி என குரலை உயர்த்தினார்களோ, இல்லையோ; 2016ல் கூட்டணி ஆட்சி என்ற குரலை விசிக உயர்த்தியது. ஆட்சியில் பங்கு வேண்டும் என்பது வேறு; தொகுதி பங்கீடு என்பது வேறு. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது, 1999ல் விசிக முன்வைத்த முழக்கம்.
நான் முதன் முதலில் நெய்வேலியில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபோது, 'கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்; எளிய மனிதனுக்கு அதிகாரம் வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்தேன். இதை சொல்கிற துணிச்சல் விசிகவுக்கு உண்டு.” என்று பேசியிருந்தார். இதனால் திமுக கூட்டணியில் விரிசலா என்ற வாதவிவாதங்கள் எழுந்தன. இதற்கிடையில் திருமாவளவன் ’ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு' பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்புக் குரல்கள் எழும்பின.
இவ்விவகாரத்தில் பாஜக, பாமக, தேமுதிக, அமமுக போன்ற கட்சிகள் திருமாவளவனை ஆதரித்தன. ஆனால் அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, “தமிழகத்தில் திராவிட ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் - விசிக தலைவர் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. இந்தச் சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...