Published : 16 Sep 2024 10:54 AM
Last Updated : 16 Sep 2024 10:54 AM

“கூட்டணியில் இருப்பதும், வெளியேறுவதும் கட்சியின் சுதந்திரமான முடிவு” - திருமாவளன்

திருவாரூர்: “தேர்தல் கூட்டணியில் இருப்பதும், அதிலிருந்து வெளியேறுவதும் ஒரு கட்சியின் சுதந்திரமான முடிவு. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம், கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சிகளுக்கும் உள்ளது.” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் 'மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' குறித்து திருவாரூரில் நடைபெற்ற மண்டல சிறப்புச் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றி திருமாவளவன் இக்கருத்தினைக் கூறினர்.

ஏற்கெனவே ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று திருமாவளவன் பேசிய கருத்து தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. கூடவே, கள்ளக்குறிச்சியில் நடக்கவுள்ள, மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடும் பல்வேறு விவாதங்களை எழுப்பியது. இந்நிலையில், “கூட்டணியில் இருப்பதும், அதிலிருந்து வெளியேறுவதும் கட்சியின் சுதந்திரமான முடிவு. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம், கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சிகளுக்கும் உள்ளது” என்று தற்போது திருமவாளவன் பேசியிருப்பதும் கவனம் பெற்றுள்ளது.

திருவாரூரில் திருமாவளவன் பேசியதாவது: மதுவிலக்கு பற்றி நான் காலங்காலமாகவே பேசியிருக்கிறேன். ஆனால் அது இப்போதுதான் கவனிக்கப்படுகிறது. இப்போதுதான் ஊடகங்களும் அதைக் கவனிக்கின்றன. இதனை இப்போது பெரிதாக்குபவர்களுக்கு சில உள்நோக்கம் இருக்கிறது. இதன் மூலமாவது முதல்வருக்கும் - எனக்கும் இடையே ஒரு முரண்பாட்டினை உருவாக்கி கூட்டணியை உடைத்து விடமுடியாதா என்பதே அவர்களின் நோக்கம். திருமாவளவனைப் பயன்படுத்தி திமுக கூட்டணியை உடைக்க முடியுமா என்று முயல்கிறார்கள்.

தேர்தல் அரசியல் வேறு மது ஒழிப்புக்காக நான் எடுக்கும் அறைகூவல் வேறு என்று நான் மிகத் தெளிவாகச் சொன்னேன். நான் மிகவும் யதார்த்தமாகவே அதைக் கூறினேன். திமுகவும் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு பற்றி குறிப்பிட்டிருக்கிறது. அதிமுகவும் சொல்கிறது. விசிகவும் சொல்கிறது. இடது சாரிகளும் சொல்கிறார்கள். அப்புறம் ஏன் மதுக்கடைகளை மூட முடியவில்லை?. இந்தக் கேள்வியை எழுப்பிவிட்டு, “எல்லோரும் ஒன்றிணைந்து மது ஒழிப்பில் தேசியக் கொள்கையை உருவாக்குவோம்” என்று நான் சொன்னேன். அந்தத் தருணத்தில்தான் அதிமுகவும் மாநாட்டில் இணையலாம் என்றேன். அதில் எந்தக் காய் நகர்த்தலும் இல்லை. எனக்கு சமூகப் பொறுப்பு இருக்கிறது. மக்கள் கட்டளையை ஏற்று நான் மாநாடு நடத்துகிறேன்.

முன்னதாக நான் கள்ளக்குறிச்சிக்குச் சென்றேன், என்னிடம் மக்கள் வைத்த கோரிக்கை. ‘தயவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்’ என்பதே. அது சாதாரண மக்களின் இயல்பான கோரிக்கை. அந்தப் பெண்மணிகளின் கோரிக்கை தான் விசிகவின் ஆர்ப்பாட்டமாக மாறியது. அந்த ஆர்ப்பாட்டத்தில் நான் மாநாட்டினை அறிவித்தேன். ஆகையால் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை கணக்கில் வைத்தெல்லாம் மாநாடு நடத்தவில்லை.

திருமாவளவன் எல்கேஜி என ஓர் அரசியல் கட்சித் தலைவர் விமர்சித்திருக்கிறார். நான் எல்கேஜி இல்லை ப்ரீகேஜி தான் என்பதை அவருக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

நான் விடுத்த மதுவிலக்கு கோரிக்கையின் நியாயத்தைப் பேசாமல், அந்த நியாயத்துக்கு துணையாக இருக்க வேண்டும் என முன்வராமல், போராட்டக் களத்துக்கு வராமல், நான் அரசியல் கணக்கு போடுவதாக சொல்வது என்னைக் கொச்சைப்படுத்துவதல்ல; கண்ணீர் சிந்தும் தாய்மார்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் செயல்.

தேர்தல் கூட்டணியில் இருப்பதும், வெளியேறுவதும் ஒரு கட்சியின் சுதந்திரமான முடிவு. இதில், சூதாட்டம் எல்லாம் இல்லை. நம்முடைய கட்சியின் எதிர்காலத்தை, நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கும் முடிவு சுதந்திரமானது. அதில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை. அதேபோல் கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சிக்கும் ஒரு கட்சியை கூட்டணியில் வைத்துக் கொள்ளவும், வேண்டாம் எனச் சொல்லவும் சுதந்திரமும், உரிமையும் இருக்கிறது. இதில் சூது, சூழ்ச்சி எல்லாம் இல்லை.

விசிக நடத்தவிருக்கும் மாநாடு 100% தூய்மையான நோக்கம் கொண்ட மாநாடு. கட்சி, சாதி, மதம் கடந்து ஒருமித்த பேச வேண்டிய கோரிக்கையை முன்வைக்கும் மாநாடு. எல்லோரும் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும். தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்பட வேண்டும். டாஸ்மாக் கடைகள் இல்லாவிட்டால் டாஸ்மாக் என்ற கார்ப்பரேஷனை இருக்காது. அகில இந்திய அளவில் தேசிய மதுவிலக்குக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படும் மாநாடு. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x