Published : 16 Sep 2024 06:51 AM
Last Updated : 16 Sep 2024 06:51 AM

பவளவிழா முடிந்ததும் திமுக நிர்வாகத்தில் மாற்றம்: கட்சியில் இளைஞரணிக்கு முக்கியத்துவம் தர நடவடிக்கை

சென்னை: இளைஞரணியினர் கட்சியில் அதிகளவில் பங்கேற்கும் வகையில், மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த தலைமை திட்டமிட்டுள்ளதால், திமுக பவளவிழாவுக்குப் பின் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக தனது 75-வது ஆண்டு பவள விழாவை கொண்டாடும் நிலையில், நிர்வாக ரீதியான பல்வேறு மாற்றங்களையும் சந்திக்க உள்ளது. இந்த மாற்றங்கள், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வெற்றியை எளிதாக்கும் என திமுக நிர்வாகிகள் கருதுகின்றனர். இதற்காக, முதலில் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது திமுகவில் 75 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இதை, சட்டப்பேரவை தொகுதியை கணக்கிட்டு, 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அளவில் 115 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இடம் பெறும் வகையில் மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது தங்கள் அணியின் சார்பில் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட வேண்டியவர்கள் குறித்த பட்டியலை உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் அமைத்துள்ளார். இந்த குழுவினர், மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் பேசினர். அதன்பின், பல்வேறு அணிகளின் நிர்வாகிகளுடனும் பேசி கருத்துகளை பெற்றுள்ளனர். இந்த சந்திப்புகளின்போது பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையிலும், கட்சியில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நிலையில், நாளை திமுக பவளவிழா நடைபெறுகிறது. சென்னையில் திமுக முப்பெரும் விழா கூட்டம் நடக்கிறது. அதற்குப்பின், தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, முதல்வரிடம் நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள், செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரையை வழங்க உள்ளது. அதன்படி, மாற்றங்கள் குறித்த அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமெரிக்கா செல்லும் போது, விமான நிலையத்தில் செய்தியாளர்கள், அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் ஸ்டாலின், ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என கூறிவிட்டு சென்றார். கடந்த சனிக்கிழமை முதல்வர் சென்னை திரும்பியபோது, அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு, “திமுக பவளவிழா நடைபெறவிருக்கும் நிலையில், நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும்” என்றார். முதல்வரின் இந்த பதில் தொடர்பான எதிர்பார்ப்புக்கும் விரைவில் விடை கிடைக்கும் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x