Published : 16 Sep 2024 06:57 AM
Last Updated : 16 Sep 2024 06:57 AM
சென்னை: சென்னை ஓட்டேரி சேமாத்தம்மன் கோயிலில் ரூ.1.58 கோடி மதிப்பீட்டிலான கருங்கல் கட்டுமான திருப்பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து முத்தியால்பேட்டை அங்காள பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்து சமய அறநிலைத்துறையின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 101 கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. செப்.16-ம் தேதி26 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அந்தவகையில், இவை அனைத்தையும் சேர்த்து, இதுவரை 2,226 கோயில்களில் கும்பாபிஷேகம் நிறைவு பெற இருக்கின்றது.
மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வகையில் ராமேசுவரம் – காசி, அறுபடை வீடுகள், ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கும் ஆன்மிகப் பயணம், மானசரோவர், முக்திநாத் ஆன்மிகப் பயணத்துக்கு அரசுமானியம் என பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாத வைணவ கோயில்களுக்கான ஆன்மிகப் பயணம் செப்.21, 28-ம் தேதி, அக்டோபர் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து தொடங்கப்பட உள்ளது.
1000 மூத்த குடிமக்கள் பங்கேற்கும் இத்திட்டத்துக்காக அரசு ரூ. 25 லட்சத்தினை மானியமாக வழங்கியுள்ளது. வரும் காலங்களில் அனைத்து கோயில்களிலும் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT