Published : 16 Sep 2024 06:36 AM
Last Updated : 16 Sep 2024 06:36 AM

இலங்கையில் ஆங்கிலேயர்களால் மரண தண்டனை வழங்கப்பட்ட கேப்டன் ஹென்றி பெட்ரிஸ்க்கு 109 ஆண்டுக்கு பிறகு மன்னிப்பு

கேப்டன் ஹென்றி பெட்ரிஸ் (இடது), அடுத்த படம்: கொழும்புவில் உள்ள கேப்டன் ஹென்றி பெட்ரிஸ் கல்லறை.

ராமேசுவரம்: இலங்கையில் 109 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் மரண தண்டனை வழங்கப்பட்ட கேப்டன் ஹென்றி பெட்ரிஸ் என்பவருக்கு, இலங்கை அரசால் தற்போது பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள காலியில் செல்வந்தர் குடும்பத்தில் 1888 ஆகஸ்ட் 16-ம் தேதி பிறந்தவர் டுவெனுகே எட்வர்டு ஹென்றி பெட்ரிஸ். இலங்கையின் சிறந்தகல்வி நிறுவனமான ராயல் கல்லூரியில் பயின்றார். முதல் உலகப் போரின்போது, இலங்கையில் ஆட்சிபுரிந்த ஆங்கிலேயேர்கள், தலைநகர் கொழும்புவைக் காப்பதற்காக சிறப்புப் படையை உருவாக்கினர்.

கொழும்பு டவுன் கார்ட் என்றஅந்த படைப்பிரிவில் கடைநிலை ராணுவ வீரராக ஹென்றி பெட்ரிஸ் சேர்ந்தார். தொடர்ந்து, கடும் உழைப்பு மற்றும் வீரத்தால் கட்டளை அதிகாரி, கேப்டன் போன்ற உயர் பதவிகளை அடைந்தார். இது சக ஆங்கிலேய ராணுவ வீரர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. 1915-ம் ஆண்டு இரு சமுதாயத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம் நாடு முழுவதும் பரவத்தொடங்கியதால், இலங்கையில்ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டது. கொழும்பு நகரை கலவரத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்த ஹென்றி பெட்ரிஸ் விரைந்து செயல்பட்டு, கலவரக் குழுக்களை கட்டுப்படுத்த தொடங்கினார்.

ஆனால், இந்த கலவரத்தைப் பயன்படுத்திக் கொண்ட சக ஆங்கிலேயே ராணுவ அதிகாரிகள் ஹென்றி பெட்ரிஸ் மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, ராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தினர். நீதிமன்றம் ஹென்றி பெட்ரிஸ் குற்றவாளி மற்றும் துரோகி என அறிவித்ததுடன், அவரை சுட்டுக் கொல்லுமாறு தீர்ப்பு வழங்கியது. அப்போது இலங்கையில் பலர்இந்த தீர்ப்புக்கு எதிராகக் குரல்கொடுத்தனர். ஆனால், வழக்கைமேல்முறையீடு செய்ய முடியாததால், கேப்டன் ஹென்றி பெட்ரிஸ் தனது 26-வது வயதில் 1915 ஜூலை 7-ம் தேதி ராணுவ முறைப்படி சுட்டுக் கொல்லப்பட்டார்.

கேப்டன் ஹென்றி பெட்ரிஸின் மரணம், ஆங்கிலேயர்களுக்கு எதிராக இலங்கையின் சுதந்திரப் போராட்டத்தை விரைவுபடுத்தும் உந்து சக்தியாக மாறியது. இந்நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, கேப்டன் ஹென்றி பெட்ரிஸ்க்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை விசாரிப்பதற்காக கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் குணரத்ன தலைமையில் மூவர் கொண்ட ஆய்வுக் குழுவை நியமித்தார்.

இந்தக் குழு கேப்டன் ஹென்றிபெட்ரிஸ் குற்றமற்றவர் என அளித்தஅறிக்கையைத் தொடர்ந்து, கடந்தவியாழக்கிழமை கேப்டன் டுவெனுகே எட்வர்டு ஹென்றி பெட்ரிஸ்க்கு மரணத்துக்குப் பின்னர் மன்னிப்பு வழங்கப்படுவதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, தனது சிறப்பு அதிகாரத்தின் கீழ் அரசாணையை வெளியிட்டார். இந்த அரசாணை கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x