Published : 15 Sep 2024 06:52 PM
Last Updated : 15 Sep 2024 06:52 PM
திருச்சி: திருவெறும்பூர் அருகே கிளியூர் பகுதியில் கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்தபோது, பெல் ஊழியரும், அவரது ஆறு வயது மகளும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மூத்த மகள் கிருத்திகா(13) பெல் வளாகத்தில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் யாஷிகா (6) 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுரேஷ், தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு பத்தாளபேட்டை பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றில் இறங்கி குளிப்பதற்காக சென்றார்.
அப்பொழுது கிருத்திகா தண்ணீரில் இறங்காமல் கரையில் அமர்ந்திருந்தார். யாஷிகா குளிப்பதற்காக கால்வாயில் இறங்கியபோது நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். அவரை காப்பாற்றுவதற்காக சுரேஷ் நீரில் இறங்கியுள்ளார். இதில் சுரேஷும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத கிருத்திகா தனது தந்தையும், தங்கையும் நீரில் அடித்துச் செல்லப்படுவதை பார்த்து கூச்சலிட்டுள்ளார். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து யாஷிகாவை மீட்டு உடனடியாக பெல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் யாஷிகா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து தகலவறிந்து வந்த திருவெறும்பூர் போலீஸார் விரைந்து சென்று யாஷிகாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும், அப்பகுதி மக்களுடன் இணைந்து, நீரில் அடித்துச் செல்லப்பட்ட சுரேஷை தேடி வருகின்றனர். அந்த கிராம மக்கள் நீருக்குள் மனிதச் சங்கிலி அமைத்து சுரேஷை தேடி வருகின்றனர். இதற்காக 3,000 கனஅடி திறக்கப்பட்ட கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT