Published : 15 Sep 2024 06:42 PM
Last Updated : 15 Sep 2024 06:42 PM
மதுரை: தமிழகத்தில் திமுக, அதிமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கும் பேச்சுக்கு இடமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.
தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மதுரை நெல்பேட்டை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவினர் தேர்தலுக்கு முன்னதாக தமிழர்கள், தமிழ் என பேசுவர். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழர்களை அவமதிப்பர். இதுதான் பாஜக. கோவையின் அன்னாபூர்ணா உரிமையாளர் அவமானப்படுத்தப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக- பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை. மத வாத சக்தியாக பாஜக இருப்பதால், அக்கட்சியுடன் கூட்டணி இல்லை. தமிழகத்தில் அதிமுக, திமுக என திராவிட கட்சிகள் தான் ஆட்சிக்கு வர முடியும். தமிழகத்தில் அதிமுக, திமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நல் ஆட்சிக்கு அது சரிப்பட்டு வராது. பல மாநிலங்கள் இதற்கு உதாரணமாக உள்ளது.
தமிழகத்தில் மது ஒழிப்பு மாநாடு மட்டும் அல்ல அனைத்து போதை ஒழிப்பு மாநாடு நடத்த வேண்டியதுள்ளது. அந்த அளவுக்கு மது, போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள அளவு உயர்த்த வேண்டும். முல்லை பெரியாறு அணையை பென்னிகுயிக் கட்டி ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் சேவையை பூர்த்தி செய்து கொடுத்தார். ஒரு வெள்ளையருக்கு இருந்த இளகிய மனசு முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை அவர் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் மட்டும் சொத்துக்களை சேர்த்து வருகிறார். முதல்வர் பதவியை வைத்து வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்கிற சுய ஆசையை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்காதது அவரது தனிப்பட்ட விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT