Published : 15 Sep 2024 06:29 PM
Last Updated : 15 Sep 2024 06:29 PM
சிவகங்கை: தமிழக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தை இடம் பெறவே திமுகவை திருமாவளவன் மிரட்டி வருகிறார் என மத்திய தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை அருகே மேப்பல், கொல்லங்குடி ஆகிய கிராமங்களில் பாஜக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மேப்பல்சக்தி தலைமை வகித்தார்.
அந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசினார். முன்னாள் மாவட்டத் தலைவர் சொக்கலிங்கம், மாவட்டச் செயலாளர் சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முகாமிற்கு பின்னர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசியபோது விசிக தலைவர் தொடங்கி மீனவர் பிரச்சினை வரை பல்வேறு விஷயங்கள் பற்றியும் பேசினார். அவர் பேசியதாவது: “ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதற்காகவே திமுகவை திருமாவளவன் மிரட்டி வருகிறார். தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சி ஒட்டுமொத்த மக்களுக்கான கட்சியோ, தலித்துகளுக்கான கட்சியோ கிடையாது. பாஜக, பாமகவை பற்றிப் பேச திருமாவளவனுக்கு யோக்கியதை கிடையாது. மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சியினருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் தமிழக அமைச்சரவையிலும் கூட்டணி கட்சியினர் பங்கேற்பது குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும். ” என்று திருமாவளவன் விவகாரத்தை முன்வைத்துப் பேசினார்.
வெள்ளை அறிக்கை வேண்டும்: “அமெரிக்கா சென்ற முதல்வர் ஈர்த்து வந்துள்ள தொழில் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சென்னையில் இயங்கும் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிகிச்சைக்காக முதல்வர் வெளிநாடு சென்றிருந்தால், அதுபற்றி வெளிப்படையாகவே தெரிவித்து இருக்கலாம்.” என்று முதல்வர் வெளிநாட்டுப் பயணத்தை விமர்சித்தார்.
பாஜக ஆட்சியில் மீனவர்கள் பிரச்சினை.. “தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு துரிதமாக செயல்பட்டு அவர்களை விடுவித்து வருகிறது. இலங்கை - இந்திய மீனவர்களுக்கான ஒருங்கிணைந்த கூட்டம் நடத்துவது சில காரணங்களால் தாமதம் ஏற்பட்டு வருகின்றது. பாஜக ஆட்சியில் மீனவர்கள் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டு வருகிறது.” என்றார்.
யூடியூப் சேனல்களுக்கு வரைமுறை! “செல்போன் வைத்திருக்கும் அனைவரும் செய்தியாளர்களாகிவிட்டனர். வரைமுறையின்றி செயல்படும் யூடியூப் சேனல்களை மத்திய அரசு வரைமுறைப்படுத்த கருத்து கேட்டுள்ளது. யூடியூப் நடத்துவோருக்கும் சமுதாயக் கடமை உண்டு. உத்தராகண்ட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறு நகரங்களிலும் தனியார் எஃப்எம் ரேடியோ நடத்த அலைவரிசை வழங்கப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.
பாஜகவுக்கு முருக பக்தர்களின் ஆதரவை பார்த்து திமுக முருகன் மாநாடு நடத்தியுள்ளது. இது திமுகவின் தேர்தல் அரசியல் வெளிப்பாடு என்று எல்.முருகன் விமர்சித்தார். கூடவே கோயில் யானைகள் பராமரிப்பை மேம்படுத்த வேண்டும் என்றார். அண்மையில் குன்றக்குடி கோயில் யானை தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...