Published : 15 Sep 2024 10:45 AM
Last Updated : 15 Sep 2024 10:45 AM
சென்னை: திமுக சார்பில், செப்.15ம் தேதி அண்ணா பிறந்த தினம், 17ம் தேதி பெரியார் பிறந்த தினம், மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக செப்.17ம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந் துள்ளது. எனவே, வரும் செப்.17-ம் தேதி திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. தென் சென்னை மாவட்ட திமுக சார்பில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 17ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு விருதுகளை, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விருதாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
குறிப்பாக பெரியார் விருது - பாப்பம் மாள், அண்ணா விருது - அறந்தாங்கி மிசா ராமநாதன், கலைஞர் விருது - ஜெகத்ரட்சகன் எம்பி.,, பாவேந்தர் விருது - கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது - வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இந்தாண்டு புதிதாக மு.க.ஸ்டாலின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் பெறுகிறார்.
16 பேருக்கு பண முடிப்பு: இது தவிர, கட்சியில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் கவுரவிக்கப் படுகின்றனர். அந்த வகையில், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கட்சி நிர்வாகிகளுக்கு தலா ரூ.1 லட்சம் பண முடிப்பை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். இந்த பண முடிப்பு, மண்டல அளவில் 4 பேர் வீதம் 16 பேருக்கு வழங்கப்படுகிறது.
விழாவில், துணை பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். இவ்விழாவில் பங்கேற்க, தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அமரும் வகையில், பிரம்மாண்ட அரங்கம் உருவாக் கப்பட்டு வருகிறது. இந்த ஏற்பாடுகளை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் கவனித்து வருகிறார். அனைவரும் விழாவை முழுமையாகக் காணும் வகையில் பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகளும் ஆங்காங்கே அமைக் கப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT